இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக நடைமுறைப்படுத்த நான்கு கட்ட ஊரடங்கு எவ்வித பலனையும் அளிக்கவில்லை. ஊரடங்கை சரிவர பயன்படுத்தி அதிகபடியான சோதனைகளை எடுக்காமல் மிதப்பில் இருந்ததே மிச்சம் என தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசை கடுமையாக சாடி வந்தார்.
இந்நிலையில், 100 நாட்களுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அழியும் நிலையில் உள்ளன. பெரு நிறுவனங்களோ கடுமையான நிதி சிக்கலில் உள்ளன. கொரோனாவுக்கு அடுத்தபடியாக பொருளாதாரம் எனும் சுனாமி அலை சுழன்று அடிக்க உள்ளது என தான் முன்பே எச்சரித்தை மத்திய மோடி அரசுக்கு மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார் ராகுல் காந்தி.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவில் ஊரடங்கால் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்கள் ஏழ்மை நிலைக்கு சென்றுவிட்டன. 10ல் 8 குடும்பங்கள் வருவாய் இழந்து தவிக்கிறது என சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையை பகிர்ந்துள்ளார்.
மேலும், எதிர்வரும் நிதியாண்டில் வங்கிகளின் வாராக் கடன் 500 பெரு நிறுவனங்களின் கடன் சிக்கலால் 1.67 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்ற அறிக்கையை இணைத்துள்ளார். அதேபோல, தன்னைப் போன்று இந்த உலகமும் இருக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கைக் கொண்டுள்ளார். அனைவருக்குமே ஒரு விலை இருக்கும், அவர்களை மிரட்டி அடி பணிய வைத்திடலாம் என எண்ணுகிறார் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.