2020-21ம் கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ள அரசியல் அறிவியல் பகுதியில் இருந்து பல்வேறு முக்கிய பிரிவுகளை நீக்கியிருப்பது இந்துத்வ கோட்பாட்டை திணிப்பதற்கான செயல் என ம.தி.மு.க பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.
“கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்வித் துறையும் முடங்கி உள்ளதால், நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டச் சுமையை 30 விழுக்காடு குறைப்பதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்திருக்கிறது.
இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் செய்தி வெளியிட்டார். மேலும் சி.பி.எஸ்.இ. இயக்குநரும் 2020-21 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டம் குறைப்புத் தொடர்பாக சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை வெளியிடப்பட்டு இருப்பதாகக் கூறி உள்ளார்.
சி.பி.எஸ்.இ. 11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (Political Science) பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி (Federalism), குடியுரிமை (Citizenship), தேசியம் (Nationalism), மற்றும் மதச் சார்பின்மை ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளன.
மேலும், “உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும்? (Why do we need Local Governments?), இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி (Growth of Local Government in India)” ஆகிய அத்தியாயங்களையும் நீக்கி உள்ளது. பாடத் திட்டம் குறைப்பு எனும் பெயரில் பா.ஜ.க. அரசு திட்டமிட்டு மேற்கண்ட பாடங்களை நீக்கி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
கொரோனா பொது முடக்கத்தைக் கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கப்பட்டதில் மத்திய பா.ஜ.க. அரசின் உள்நோக்கம் அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது. பா.ஜ.க. தங்களது சொந்த விருப்பங்களைத் திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம் பெற்றிருக்கும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டை நீக்க வேண்டும் என்று நீண்டகாலமாகவே இந்துத்துவ சனாதன சக்திகள் கோரி வருகின்றன.
கடந்த 2014 இல் அதற்கான முயற்சிகளில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டபோது கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தற்போது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே கல்வி என்கின்ற சனாதன சித்தாந்தத்தைச் செயல்படுத்த பா.ஜ.க. அரசு தீவிரமாக இருக்கிறது.
இந்நிலையில்தான் பாடத்திட்டத்தில்கூட ‘மதச் சார்பின்மை’ என்ற வார்த்தையே இடம் பெறக் கூடாது என்ற பாசிச சிந்தனை பா.ஜ.க. அரசுக்கு வந்திருக்கிறது. அனைத்து அதிகாரங்களையும் டெல்லியில் குவித்து வைத்துக் கொண்டு ‘ஒற்றையாட்சி’ எதேச்சதிகார ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் வகையில் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து வருகிறது.
மாணவர்களின் நெஞ்சத்திலும், நஞ்சு கலக்கும் வகையில் கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம் போன்ற பாடங்களை நீக்கி இருக்கிறது.இந்தியாவில் மக்களாட்சி அபாயகட்டத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது என்பதற்கு இவை எல்லாம் சான்றுகளாகும். பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்களைத் திட்டமிட்டு அழித்தால் இந்தியா எனும் அமைப்பே கேள்விக்குறியாகிவிடும்
கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்து, சி.பி.எஸ்.இ. பாடங்களைக் குறைக்க வேண்டுமேயொழிய, பா.ஜ.க. அரசு கல்வித் துறையில் இந்துத்துவ சனாதனக் கோட்பாடுகளைப் புகுத்தக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.