கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கியும், அதிலிருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வந்தாலும், நோய் தாக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பலர் சிகிச்சை பலனின்றியும் சிலர் சிகிச்சையே கிடைக்காமலும் உயிரிழக்கும் பரிதாபங்களும் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், பெங்களூருவில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடல் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடுரோட்டிலேயே மழையில் நனைந்தபடி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் ஹனுமந்தா நகரில் உள்ள 63 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களாகவே கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக உடனடியாக அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்துள்ளனர்.
மாலை 4 மணிக்கே ஆம்புலன்ஸ் வரும் எனக் கூறப்பட்டுள்ளது. வீட்டுக்கு அருகில் ஆம்புலன்ஸ் வந்தால் அக்கம்பக்கத்தினர் அச்சமடையக்கூடும் என்பதால் தெரு முனைக்கு முதியவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது முதியவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சாலையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். அதன் பின்னர் 3 மணி நேரம் கழித்தே ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை எடுத்துச் சென்றுள்ளது.
கிட்டத்தட்ட 3 மணிநேரமாக கொட்டும் மழையில் சாலையிலேயே முதியவரின் உடல் கண்டுகொள்ளப்படாமல் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த காரணத்தால் எவரும் அவர் பக்கம் செல்லாமல் இருந்திருக்கிறார்கள்.
இது குறித்து தெரிவித்துள்ள முதியவரின் குடும்பத்தினர் சுகாதார உதவிக்கு தொடர்பு கொண்டதாகவும் யாரும் பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா, ''இது மிகவும் துயரமான, துரதிர்ஷ்டவசமான சம்பவம்.
எந்த தாமதமும் இல்லாமல் நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட வேண்டும்'' என தெரிவித்துள்ளார். இது சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இதுவரை 7,173 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். 106 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.