இந்தியா

“நீட் தேர்வை கைவிட்டு +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை நடத்துக” - கி.வீரமணி வலியுறுத்தல்!

கொரோனாவின் கடும் அச்சுறுத்தல் காரணமாக ‘நீட்’ தேர்வையும் கைவிட்டு +2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வி சேர்க்கை நடைபெறுவதே சரியானது என ஆசிரியர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

“நீட் தேர்வை கைவிட்டு +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை நடத்துக” - கி.வீரமணி வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா அபாயத்தின் காரணமாக பல்கலைக்கழகத் தேர்வுகள் வரை நிறுத்தப்படும் ஒரு சூழ்நிலையான காலகட்டத்தில் ‘நீட்’ தேர்வையும் கைவிட்டு +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான சேர்க்கை நடைபெறுவதே சரியானது - நியாயமானது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு :

"கொரோனா தொற்றின் வேகம் குறைவதாகத் தெரியவில்லை. அடுத்து வரும் காலகட்டங்களில் இதன்வீச்சு மிக அதிகமாகவே இருக்கும் என்று மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களும், மருத்துவப் பல்கலைக்கழகங்களும் கூறி வருகின்றன. எட்டு லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்று ‘யுனிசெப்’ கூறியுள்ளது.

இந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை நாள்தோறும் மத்திய - மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

இப்படி ஒரு சூழ்நிலையில், மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ தேர்வு என்ற ஒன்றை நடத்துவது என்பது அபாயகரமான செயலே!

அடுத்துவரும் மாதங்களில் கொரோனாவின் வேகம் மேலும் கடுமையாக அதிகரிக்கும் என்ற நிலையில், ‘நீட்’ தேர்வை நடத்துவது - மாணவர்களின் உயிருக்கே உலை வைப்பதாகும்.

‘நீட்’ தேர்வு எழுதுவதில் 79 விழுக்காட்டினர் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களே! மும்பையில் 250 பேருக்கு ஒருவர், சென்னையில் 400 பேருக்கு ஒருவர் என்கிற அளவுக்குக் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடல்நலம், மன நலம் பாதிக்கப்பட்ட ஒரு காலகட்டம் இது!இப்படியொரு உடல் பாதிப்பும், மன இறுக்கமும் உள்ள அசாதாரணமான நிலையில், மாணவர்கள் மட்டும் இவற்றின் பாதிப்பிலிருந்து விலகி இருப்பர் என்று கருத இடம் இல்லை.

‘நீட்’ தேர்வுக்காகப் படிக்கும் மனநிலை மாணவர்களுக்கு இல்லை என்பது யதார்த்தம்!

‘நீட்’ தேர்வு நடந்த 2019 ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ன நடந்தது? 1,000 மாணவர்கள் பெற்றோர்களுடன் தேர்வு மையத்துக்குச் சென்றிருந்தனர்.

தேர்வு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் என்று நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்குக் கூடும் நிலை ஏற்பட்டது.

“நீட் தேர்வை கைவிட்டு +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை நடத்துக” - கி.வீரமணி வலியுறுத்தல்!

சமூகப் பொறுப்போடு சிந்திக்கவேண்டும்!

இப்பொழுது ‘நீட்’ தேர்வு நடத்தினாலும், இதனை எப்படி தவிர்க்க முடியும் - தடுக்கத்தான் முடியும்? இந்தச் சூழலில், தேர்வு நடந்தால், எவ்வளவு பெரிய அபாயகர பாதிப்பு ஏற்படும் என்பது சமூகப் பொறுப்போடு மத்திய - மாநில அரசுகள் சிந்தித்து செயலாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.

‘நீட்’ தேர்வு: தகுதியின் அளவுகோல் அல்ல - ஊழலின் உறைவிடமே!

‘நீட்’ தேர்வு மாணவர்களின் தகுதியையும், திறமையையும் நிர்ணயிக்கிறது என்பது கடந்த நான்கு ஆண்டுகளில் நிரூபிக்கப்படாத ஒன்று.

ஊழலின் உறைவிடமாகத்தான் அத்தேர்வுகள் நடந்தன என்பதெல்லாம் வெளிச்சத்துக்கு வந்தன. +2 வகுப்பில் அமராமலேயே டெல்லியில் இருந்து ‘நீட்’டுக்காக பெரும் செலவு செய்து படித்து, ‘நீட்’டில் முதல் மதிப்பெண் பெற்ற’ கேவலமான செய்திகள் எல்லாம் சந்தி சிரித்தன!

கார்ப்பரேட்டுகளால், ‘நீட்’ பயிற்சியின் பெயரால் சூறாவளித்தனமான லட்சக்கணக்கான ரூபாய்களை சுரண்டும் பகற்கொள்ளை நடத்தப்பட்டது.

NRI என்று சொல்லப்படும் வகையில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் கைகளும் இதில் புகுந்து விளையாடின.

அனிதாவின் மரணம் என்ன சொல்லுகிறது?

ஏழை, எளிய, கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள்தான் ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்டனர் என்பது உலகத்துக்கே தெரிந்த ஒன்று!

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறையாக படிக்க முன்வந்த, மூட்டைத் தூக்கும் ஒரு தொழிலாளியின் மகள் - எங்கள் செல்வம் - அனிதா +2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்று, ‘நீட்’டில் வெறும் 86 மதிப்பெண் மட்டும்தான் பெற முடிந்தது என்பது எதைக் காட்டுகிறது? அவரின் தற்கொலை கற்றுக் கொடுக்கும் பாடம் என்ன?

“நீட் தேர்வை கைவிட்டு +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை நடத்துக” - கி.வீரமணி வலியுறுத்தல்!

‘நீட்’டை நிறுத்துக!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள சமூகநீதியின் ஆணிவேரில் திராவகத்தைக் கொட்டும் சதிதான் ‘நீட்’ என்பது கல்வியாளர்கள் உள்பட அனைவரும் கூறும் உண்மையாகும்!

‘நீட்’ தேர்வை கைவிடுவதோடு, இவ்வாண்டு மருத்துவக் கல்லூரிகளில் சரியான இட ஒதுக்கீடுகளில் சமூகநீதி அனைவருக்கும் கிட்டும் வகையில், சில ஆயிரக்கணக்கான மருத்துவக் கல்லூரி இடங்கள் கூடுதலாக்கப்பட வேண்டும். இதன்மூலம் சுகாதார வசதியை நாட்டு மக்கள் கூடுதலாகப் பெற அடிக்கட்டுமானத்தை பலப்படுத்துகின்ற நன்மையும் ஏற்படும். எங்கெங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெங்கெல்லாம் கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் மட்டுமல்ல, மருந்தியல் கல்லூரிகள், செவிலியர்கள் கல்லூரிகள் (நர்சிங்), லேப் டெக்னீசியன் போன்ற படிப்புகளையெல்லாம் அதிகப்படுத்தவேண்டும். நாட்டின் மொத்த வருமானத்தில் (ஜி.டி.பி.), தற்போது நிதிநிலையில், ஒரு சதவிகிதம் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படுகிறது. இது குறைந்தபட்சம் 3 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக உயர்த்தப்படவேண்டும் உடனடியாக வரும் நிதிநிலை அறிக்கையில். அப்பொழுதுதான் உண்மையாகவே, ஏழை, எளிய, கிராமப்புற மக்களுக்கு கூடுதல் மருத்துவ வசதிகள் தாராளமாகக் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டும், இப்பொழுது ஏற்பட்டுள்ள கொடும் கொரோனா நோயின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டிய அவசியத்தை மனதிற்கொண்டும் ‘நீட்’ தேர்வை கைவிடுவது அவசியமாகும்.

+2 மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்வதே சரி!

+2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான முடிவுகள் எட்டப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்!

பழைய தேர்வு, இட ஒதுக்கீடு முறையில் வெற்றி பெற்று மருத்துவர்களான தமிழ்நாட்டவர்கள், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே தலைசிறந்த மருத்துவர்களாக இன்றைக்கும் புகழ்பெற்று விளங்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்!”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories