தமிழகம் மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் பரோட்டா என்பது மிகவும் விருப்பமான உணவுகளில் ஒன்று. இந்நிலையில், பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதேவேளையில், ரொட்டி 5 சதவீத ஜி.எஸ்.டி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதேப் பிரிவைச் சேர்ந்த பரோட்டாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அதிகமான வரி விதிக்கப்பட்டது என இணையவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருரில் செயல் பட்டுவரும் பிரபல தனியார் நிறுவனமான ‘ஐடி பிரெஷ்புட் - (ID Fresh Food)’ இட்லி - தோசை மாவு, பரோட்டா, தயிர், பன்னீர் உள்ளிட்டவைகளை அப்படியே தயார் செய்யும் உணவுபொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவனம் கோதுமை பரோட்டா, மலபார் பரோட்டா போன்ற உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய அரசின் ஏ.ஏ.ஆர்( Authority for Advance Rulings) அமைப்பிடம் வழக்கு தொடர்ந்தது. இந்த ஏ.ஏ.ஆர் அமைப்பானது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஜி.எஸ்.டி தொடர்பான புகார்களை விசாரித்து முடிவெடுக்கும் அமைப்பாகும்.
ஐடி பிரெஷ்புட் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், “ரொட்டி வகையில் பரோட்டா சேராது என்பதால் ரொட்டிக்கு விதிக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை பரோட்டாவிற்கு விதிக்கமு டியாது. பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டிதான் விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.
அதாவது, தீர்ப்பாயத்தின் கூற்றுப்படி, விதி 1905ன் கீழ் வரும் அனைத்து ரொட்டிகளும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டவையாக, முழுமையாக சமைக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். அவற்றிற்கு மட்டுமே 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஆனால் பரோட்டாவை உண்பதற்கு முன்பாக சூடு பண்ண வேண்டியது அவசியம். அதனால் ரொட்டி கணக்கில் அதன் ஜி.எஸ்.டி வரியை குறைக்க முடியாது” என விளக்கம் அளித்துள்ளது.
இதனையடுத்து தென்னிந்தியர்களின் விருப்ப உணவாக பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டதை எதிர்த்து இணையத்தில் குரல்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #HandsOffParotta என்ற ஹேஸ்டாக் வைரலாகியுள்ளது. பரோட்டா, ரொட்டி ஆகிய இரண்டுமே மைதா மாவிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அவற்றைச் சமைக்கும் முறைதான் மாறுபடும். ஆனால் புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறைப்படி பரோட்டாவுக்கு 18 சதவீத வரி, ரொட்டிக்கு 5 சதவீத வரி என்ற பாகுபாடு ஏன் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, “நாடு சந்திக்கக்கூடிய சாவல்களுக்கிடையே பரோட்டாவின் இருப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும் நாம் கவலைபட வேண்டும் போல் தெரிகிறது. பரோட்டா ரொட்டி வகையை சேர்ந்தது இல்லை என்றால், புதிதாக பரோட்டீஸ் என்ற வகையில் சேர்த்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.