சீனாவின் வூஹான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் 6 மாதங்களை கடந்தும் முடிந்தபாடில்லை. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வரலாற்றிலேயே உலகம் முழுவதும் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்டுள்ள தாக்கம் கொரோனாவை விட கொடுமையானதாக உள்ளது.
இதனால், லட்சோபலட்ச மக்கள் வேலையின்றி, உணவின்றி கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். விரல் விட்டும் எண்ணிடும் வகையில் ஒரு சில நாடுகள் கொரோனாவின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு ஒழிக்கப்பட்டிருந்தாலும், பொருளாதாரத்தை மீட்பது பெரும் சவாலாகவே உள்ளது. இதன் காரணமாக உலக வரலாற்றிலேயே உச்சபட்ச வறுமை உண்டாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஐநாவின்பொருளாதார வளர்ச்சி ஆராய்ச்சிக்கான உலக நிறுவனத்துடன் இணைந்து லண்டன் கிங்ஸ் கல்லூரி, ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவை மேற்கொண்ட ஆய்வில், கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் உலக அளவில் சுமார் 100 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்குவார்கள் என்ற பேரதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
ஒரு நாளுக்கு ரூ.142 ஊதியம் நிர்ணயித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தெற்காசிய, கிழக்காசிய நாடுகளே வறுமையின் மையமாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் மட்டுமே 39.5 கோடி பேர் உச்சகட்ட வறுமையின் பிடியில் சிக்குவர். குறிப்பாக இந்தியா கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்றும், இதற்கு அடுத்தபடியாக ஆப்பிரிக்க நாடுகளில் 11.9 கோடி பேர் வறுமையால் வாடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உச்சகட்ட வறுமை பட்டியலில் முதல் பத்து இடங்களில் அங்கம் வகித்த இந்தியாவின் தற்போது கொரோனாவால் மேலும் மோசமான நிலையையே அடையும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஆகவே 2030க்குள் ஒரு நிலையான பொருளாதாரத்தை எட்டுவதற்கு தற்போதில் இருந்தே நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இலக்கை அடைய முடியும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.