இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது நாளொன்றுக்கு 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வேளையில் அரசோ பல்வேறு தளர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தொற்று பாதிப்பு உடையவர்கள், தங்களுக்கு கொரோனா இருப்பதே தெரியாமல் வெளியே உலா வருகின்றனர்.
இதன் காரணமாக நாட்டில் அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு சமூக அளவில் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸின் சமூக பரவல் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
அதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் பல்ராம் பார்கவா, நகர்ப்புறங்களில் கொரோனா பரவல் ஆபத்து அதிகமாகவே உள்ளதாகவும், அதே நேரத்தில் சமூக பரவல் நிலை இதுவரை ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் 83 மாவட்டங்களில் 28,595 வீடுகளில் எலைசா ரேபிட் சோதனை நடத்தப்பட்டது. அதில் 15 மாவட்டங்களில் 0.73% மக்களுக்கு நோய் தீவிரமாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே, நகர்ப்புறங்களிலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட (Containment) பகுதிகளிலும் பரவல் அதிகமாக உள்ளது. இதனைத் தடுக்க அந்தப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பல்ராம் கூறியுள்ளார்.