பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் நடைபெற்ற உனா சம்பவத்தைப் போன்று தற்போது லக்னோவில் தலித் இளைஞர்களை கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர் ஆதிக்க சாதியினர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் லக்னோ பகுதியில் கலிலாபாத் கிராமத்தில் கடந்த ஜூன் 4ம் தேதி மூன்று தலித் இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினர் வீட்டில் உள்ள மின்விசிறியை திருடியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், ஆதிக்க சாதியினர் போலிஸாருக்கு தகவல் கொடுக்காமலேயே அவர்களை கட்டி வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். அந்த தாக்குதலின்போது அவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் அவர்கள் மூன்று பேருக்கும் வலுக்கட்டாயமாக மொட்டை அடித்து, கழுத்தில் காலணிகளை தொங்கவிட்டு ஊர்வலமாக ஊரைச் சுற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த இரண்டு பேரை எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு வருகின்றனர்.
முன்னதாக தலித் சிறுவன் கோவிலுக்குள் சென்றதற்காக துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.