இந்தியாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படுவதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு பல முறை வலியுறுத்தியிருந்தார்.
அதேபோல, கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பிறகும், அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்கு பிறகும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நடுத்தர, சிறு மற்றும் குறு தொழிலாளர்களை காக்கும் வகையில் நிவாரண நிதியை வழங்கவும் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், நான்கு கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்களை முடக்க வைத்தும், கொரோனா பரவலை தடுப்பதை மத்திய மோடி அரசு தோல்வியடைந்துவிட்டது எனவும் அண்மையில் ராகுல் காந்தி கடுமையாக சாடியிருந்தார்.
இதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே பாதாளத்தில் இருந்த இந்தியாவின் பொருளாதார நிலை தற்போது கொரோனா தாக்கத்தால் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4 சதவிகிதத்துக்கும் கீழ் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்காமல் 20 லட்சம் கோடி திட்டம் என்ற பெயரில், மக்கள் மீது மேன்மேலும் கடன் சுமையை மோடி அரசு ஏற்றியுள்ளது.
இந்த நிலையில், நாட்டின் பொருளாதாரத்திலும், சிறு, குறு மற்றும் நடுத்த நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் மேற்கொண்ட ஆய்வை பகிர்ந்த ராகுல் காந்தி, மோடி அரசு மக்களிடம் கையில் பணத்தை கொடுக்க மறுப்பதோடு பொருளாதாரத்தை தீவிரமாக அழித்து வருகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், இந்த நிலை மற்றுமொரு பணமதிப்பிழப்பு நிலையை போன்று உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, தொழிலாளர்களிடம் மாதம் 7500 ரூபாயும், உடனடியாக பத்தாயிரம் ரூபாயும் வழங்கும்படி தொடர்ந்து ராகுல் காந்தியும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.