கொரோனா ஊரடங்கு காரணமாக அமேசான் பிரைம் தொடர்ந்து வெப் சீரிஸ், படங்கள் என வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 15ம் தேதி Paatal Lok என்ற வெப் சீரிஸ் வெளிவந்தது. சிறப்பான கதை, விறுவிறுப்பான காட்சிகள், அரசியல் என பல தரப்பட்ட மக்களின் பாராட்டுக்களை பெற்றது.
மேலும் அந்த படத்தில் இந்துத்வா அமைப்பு பற்றி பல காட்சிகள் இடம் பெற்றிருப்பது இந்துத்வா கும்பல்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அதுமட்டுமல்லாமல், அந்த வெப் சீரிஸில் தன்னுடைய ஒப்புதல் இல்லாமலே தன்புகைப்படத்தை பயன்படுத்தியதாகவும், ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களை அவமதிப்பாதாக இருப்பதாகவும் பா.ஜ.க எம்.எல்.ஏ நந்த்கிஷோர் குர்ஜார் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் வகுப்புவாத பிரச்சனை ஏற்படுத்தியிருப்பதாக கூறி காவல் நிலையத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த வெப் சீரிஸை தடை செய்யவேண்டும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதனிடையே அந்த படத்தை தயாரித்து இயக்கிய அனுஷ்காவை, விராட் கோலி விவாகரத்து செய்யவேண்டும் என சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். இதுதொடர்பாக நந்த்கிஷோர் குர்ஜார் கூறுகையில், “இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு தேசபக்தர்.
அவருக்கு இந்தியா மீது மிகுந்த மரியாதை உள்ளது. எனவே அவர் அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து செய்யவேண்டும்” என கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அனுஷ்கா ஷர்மாவின் தயாரிப்பில் வெளியான வெப் சீரிஸ் வெற்றியடைந்ததை அடுத்து படக்குழு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் PaatalLok இரண்டாவது பாகம் விரைவில் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.