மகாராஷ்ட்ராவிலிருந்து சைக்கிளில் 7 நாட்கள் பயணித்து உத்தர பிரதேச மாநிலத்துக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி தனது கிராமத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து, வாழ்வாதாரம் இழந்து நடைபயணமாகவே சொந்த ஊர்களுக்குப் பயணிக்கும் சோக நிலை ஏற்பட்டது. மன உளைச்சல் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்வதும் தொடர்ந்து வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் உள்ள மியூசிவியான் எனும் கிராமத்தைச் சேர்ந்த சுனில் (19), மகாராஷ்டிராவில் பணியாற்றி வந்துள்ளார். ஊரடங்கால் வேலையின்றி, உணவின்றித் தவித்து வந்த அவர் சைக்கிளிலேயே 7 நாட்கள் பயணித்து தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பியுள்ளார்.
வெளி மாநிலத்தில் இருந்து வந்த நிலையில் தன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சுனில், மன உளைச்சலால் நேற்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து, ஏ.எஸ்.பி லால் பரத் குமார் பால் கூறுகையில், “ஊரடங்கால் 7 நாட்கள் சைக்கிளில் வந்த சுனில் வீட்டிலேயே தனிமையில் இருந்தார். தனிமைக்காலம் முடிவடையும் நேரத்தில் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட சுனிலின் குடும்பத்தினர் கூறும்போது, “சுனிலின் தந்தை ஊரடங்கால் குஜராத்தில் சிக்கியிருக்கிறார். சுனில் வீட்டுக்கு வந்தபோது அவர் பாக்கெட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. ஊரடங்கிற்குப் பிறகு அவருக்கு வேலை பறிபோயுள்ளது. அந்த விரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம்” எனத் தெரிவிக்கின்றனர்.