ஆந்திராவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு போதுமான என்95 மாஸ்குகளை அரசு கொடுக்கவில்லை. ஒரே மாஸ்கை 15 நாட்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும் நிலையே உள்ளது எனக் குற்றஞ்சாட்டப்பட்ட நரசிப்பட்டின அரசு மருத்துவமனை மயக்க மருந்து நிபுணர் சுதாகர் கடந்த ஏப்ரல் 8ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், விசாகப்பட்டிணத்தின் ஆகாயபல்லெம் பகுதியில் உள்ள சாலையில் அதே மருத்துவர் சுதாகர், போலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் கடந்த வியாழன் அன்று நிகழ்ந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும், ஆளும் ஜெகன்மோகன் அரசு எதிரான விவாத பொருளாகவும் மாறியுள்ளது.
ஆந்திராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அந்தக் காணொளியில், மேல் சட்டையின்றி இருந்த மருத்துவர் சுதாகரின் கைகளை பின்னிருந்து கட்டி அவரை தாக்கியதோடு, குண்டுக்கட்டாக ஆட்டோ ரிக்ஷாவில் விசாகப்பட்டிணப் போலிஸார் ஒருவர் ஏற்றியிருக்கிறார். இதனை அங்கிருந்த வேறு சில போலிஸாரும், பொதுமக்களுமே வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள போலிஸ் கமிஷ்னர் ஆர்.கே.மீனா, ஆகாயபல்லெம் தேசிய நெடுஞ்சாலையில் குடி போதையில் ஒருவர் பொது மக்களுக்கு இடையூறாக கூச்சலிடுகிறார் என தகவல் வந்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு போலிஸார் விரைந்திருக்கிறார்கள். அங்கு இருந்தது சஸ்பென்ட் செய்யப்பட்ட அரசு மருத்துவர் சுதாகர் என தெரியவந்தது. காவலர்களின் மொபைல் ஃபோன்களை வீசியெறிந்ததோடு, போலிஸாரை நோக்கியும் சுதாகர் தகாத வார்த்தைகளில் பேசியிருக்கிறார். முன்னதாக, போலிஸார் செல்வதற்கு முன்பே பொதுமக்கள் சுதாகரின் கைகளை கட்டியிருக்கிறார்கள்.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அநாகரிகமாக நடந்துக்கொண்டதால் மருத்துவர் சுதாகர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதன் பின்னர், அவரை மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என மருத்துவர்கள் கூறியதன் பேரில் மனநல மருத்துவமனையில் சுதாகர் சேர்க்கப்பட்டிருக்கிறார் என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, மருத்துவர் சுதாகர் மீது ஜெகன்மோகன் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் சிபிஐ உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்ததோடு அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த காரணத்தாலேயே அவர் பழிவாங்கப்பட்டிருக்கிறார் என்றும், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ஆளும் அரசு கீழ்தரமாக நடத்தியுள்ளது என்றும் கடுமையாக விமர்சிக்கவும் செய்துள்ளன.
இது தொடர்பாக பேசியியுள்ள மருத்துவர் சுதாகர், தன்னுடைய கடன் தொகையை வங்கியில் செலுத்துவதற்கா காரில் சென்றுக் கொண்டிருந்த போது, வழியில் போலிஸார் தடுத்து நிறுத்தியதோடு என்னுடைய பணப் பை மற்றும் மொபைல் போனை பறித்ததோடு என்னை அடித்து துன்புறுத்தினர் எனக் கூறியுள்ளார்.
இதனிடையே, மனநல மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு கண்காணிப்பில் உள்ள மருத்துவர் சுதாகர் மீது பல்வேறு வழக்குகளையும் பதிவு செய்த விசாகப்பட்டிணம் காவல்துறை விசாரணையும் நடத்தி வருகிறது. மேலும், சுதாகரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட போலிஸார் ஒருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.