ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து பல்வேறு துறைகளை, மக்களை மீட்கும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார அறிவிப்புகள் வெளியிடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதன்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாட்களாக திட்டங்களை அறிவித்துள்ளார். பொருளாதார முடக்கத்திலிருந்து மீள்வதற்கு ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நேரடியாகப் பணத்தை மத்தியஅரசு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தால் நாட்டில் 89 சதவீத மக்களின் வாராந்திர வருவாய் பூஜ்ஜியமாக இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவை நடத்தியஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களுக்கு செல்லும் போது வேலை கிடைத்தது. இப்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்பும்போது, அவர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கவலைக்குரியதாக மாறியிருக்கிறது.
ஏழை மக்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் நேரடியாக பணத்தை மத்திய அரசு வழங்கவேண்டும் என்ற கருத்தை தொழிலதிபர்கள் அசிம் பிரேம்ஜி, வேணு ஸ்ரீனிவாசன் இருவரும் ஆதரிக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் சற்று முன்னர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ப.சிதம்பரம், “பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூபாய் 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான்.
ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.91 சதவீதமான 1,86,650 கோடி ரூபாய் நிதி ஊக்கத்தொகை பொருளாதார நெருக்கடி சூழ்நிலையைப் பொறுத்தவரை முற்றிலும் போதாது” எனத் தெரிவித்துள்ளார்.