கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சரிந்த பொருளாதாரத்தைச் சீரமைக்க, பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தை அறிவித்தார்.
அதுகுறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு நாளும் செய்தியாளர்களைச் சந்தித்து வெளியிட்டு வருகிறார். கடந்த மூன்று நாட்களில் சிறு குறு தொழில் துறையினர், விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள், மீனவர்களுக்கான திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன், இன்று நான்காம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, நிலக்கரி, சுரங்கம், இராணுவ உற்பத்தி, விண்வெளி மேலாண்மை, விமான நிலையங்கள், மின்சார விநியோகம், ஆகாயம், அணு ஆற்றல், விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு :
விமான நிலையங்கள் தனியாருக்கு ஏலம்!
ஆறு விமான நிலையங்கள் ஏலத்தில் விடப்படும். 12 விமான நிலையங்கள் சரவதேச அளவுக்குத் தரம் உயர்த்தப்படும். இதன் மூலம் சர்வதேச விமானங்களுக்கு மிகப் பெரிய கூடாரமாக இந்தியா திகழமுடியும். இதற்கான முதலீடுகளில் இரண்டு கட்டங்களில் ரூ.13,000 கோடி வரை முதலீடு கிடைக்கும்.
சுரங்கங்கள் தனியார் வசம் ஒப்படைப்பு!
கனிம உற்பத்தி, கனிமச் சுரங்கங்களுக்கான ஏலம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அலுமினிய சுரங்கத் துறையில் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்காக பாக்ஸைட் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்களைச் சேர்த்து ஏலத்தில் விடும் நடைமுறை கொண்டுவரப்படும்.
வருவாய் பங்கீட்டு முறையை அடிப்படையாகக் கொண்ட நிலக்கரி சுரங்க ஏல முறை கொண்டுவரப்படும். இதில் அரசின் தலையீடு நீக்கப்படும். யார் வேண்டுமானாலும் இந்த ஏலத்தில் பங்கேற்று நிலக்கரிச் சுரங்கங்களை வாங்கவும், அதை திறந்தவெளிச் சந்தைகளில் விற்கவும் வழிவகை செய்யப்படும்.
இராணுவத் தளவாட உற்பத்தியில் அந்நிய முதலீடு 74 சதவிகிதம்!
இராணுவத் தளவாட உற்பத்தியில் அந்நிய முதலீடு 74 சதவிகிதமாக அதிகரிப்பு. இராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தும் நிலை மாற்றப்பட்டு சுயசார்பு நிலை உருவாக்கப்படும். இராணுவ உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு தனியாக பட்ஜெட் போடப்படும்.
மின் விநியோகம் தனியார் மயம்!
முதல்கட்டமாக யூனியன் பிரதேசங்களில் மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயம். மின்சார விநியோக முறைகேடுகளுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார விநியோகப் பணி கண்காணிக்கப்படும்.
விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி!
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்திய விண்வெளித் துறையின் வெற்றிப் பயணத்தில் தனியார் துறையின் பங்களிப்பும் இருக்க வேண்டும். தனியார் துறைக்கு அரசு தரப்பிலிருந்து சிறந்த கொள்கை மற்றும் விதிமுறைச் சூழல் உருவாக்கித் தரப்படும். தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் வசதிகளைப் பயன்படுத்தி முன்னேறிச் செல்ல வழிவகை செய்யப்படும்.
அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி!
மருத்துவ ஐசோடோப்புகளை உற்பத்தி செய்வதற்காக பொதுமக்கள் - தனியார் பங்களிப்புடன் ஆய்வு உலை அமைக்கப்படும். அணுசக்தி தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் ஸ்டார்ட் அப் தொழிற்சூழலை இணைக்க தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும்.
இவ்வாறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நிதி அமைச்சரின் அறிவிப்புகள் இந்தியாவையே தனியாருக்கு பங்கிட்டு விற்பதைப் போல இருப்பதாக பொருளாதார வல்லுநர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.