இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், அரசு அறிவித்த ஊரடங்கு இன்னும் ஒருவாரத்தில் முடியப்போகும் நிலையில் கொரோனா பாதிப்பு ஒழிந்தபாடில்லை. ஆனாலும் கொரோனா தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பணியில் தன்னலம்பாராது அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றுவதற்குச் செய்த முயற்சி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்புப் பணியில் மருத்துவர் ஜாஹித் பணியாற்றி வந்துள்ளார். 40 நாட்களுக்கு மேல் வீட்டுக்குச் செல்லாமல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஜாஹித் நேற்று முன்தினம் பணி முடித்துவிட்டு, நோன்பு திறப்பதற்காக தான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றுள்ளார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் ஒரு கொரோனா நோயாளியின் நிலைமை மோசமாக உள்ளது. அவசரமாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றவேண்டும் என கூறியுள்ளனர். இதனால் நோன்பு திறக்கமாலேயே மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதனிடையே கொரோனா நோயாளிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸில் ஏற்றியுள்ளனர்.
அப்போது மருத்துவர் ஜாஹித் நோயாளியைப் பார்ப்பதற்காக ஆம்புலன்ஸிற்குச் சென்றுள்ளார். அங்கு நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கைச் சுவாசக் கருவிகள் தற்செயலாக கழன்றிருந்ததால் மூச்சு விட மிகுந்த சிரமமடைந்து திணறிக்கொண்டிருந்துள்ளார்.
நோயாளியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றால், செயற்கை சுவாசக் குழாயை சரியாகப் பொருத்தவேண்டும். அப்போது தான் அணிந்திருந்த PPE, அதாவது பாதுகாப்புக் கவசம் அந்த நோயாளிக்கு மூச்சுக்குழலில் சரியாகப் பொருத்தமுடியாமல் பார்வையை மறைத்து இடையூறாக இருந்துள்ளது.
இதனால் சட்டென தனது பாதுகாப்பு முகம் மறைக்கும் கண்ணாடியை கழட்டிவிட்டு குழாயை சரியாக பொருத்தும் பணியில் ஈடுபட்டு அவரை பாதுகாத்துள்ளார். இதுபோல செய்தால் நோயாளியின் மூச்சுக்காற்று பட்டு நோய் தொற்று ஏற்படும் என தெரிந்தும் நோயாளியைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் இதுதொடர்பான தகவலை சக மருத்துவரிடம் கூறிவிட்டு, தற்போது தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஆர்.டி.ஏ., எய்ம்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், “தன் கண்முன்னே மரணத்தை எட்டும் நோயாளியைக் காப்பாற்றவேண்டும் என்று மருத்துவர் ஜாஹித் தன்னை பெரும் அபாயத்திற்குட்படுத்திக் கொண்டு தன் கடமையைச் செவ்வனே செய்திருக்கிறார்” என அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.