இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதுவரை நாடுமுழுவதும் 59,662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,981 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அதிகம் பாதித்த பகுதியில் டெல்லியும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 448 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,980 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
இந்த பாதிப்புக்கிடையில் டெல்லியில் புலம் பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு வரமுடியாமல் தவித்துவருகின்றனர். அவர்களை பாதுக்காக்க அம்மாநில அரசு எடுத்த முயற்சிகள் போதவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் கொரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கும், தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கும் முறையான வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே போதிய அளவில் நிவாரணம் கிடைக்காமல் டெல்லியில் வாழும் ஏழை மக்கள் அவதியுறும் நிலையில், மாநில வருவாய்க்காக டெல்லி அரசு மதுக்கடைகளை திறந்துள்ளது. இது அம்மாநில மக்கள் மத்தில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லி அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா சிகிச்சை அளிக்க 5 நட்சத்திர ஹோட்டலைக் கையப்படுத்த அனுமதி அளித்துள்ள மற்றொரு அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்பாடுத்தியுள்ளது.
அந்த அறிவிப்பில், டெல்லியில் உள்ள நடுத்தர மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களைக் கையகப்படுத்தி உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா சிகிச்சை அளிக்க ராஜீவ் மருத்துவமனைக்கு டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி சிகிச்சை அளிப்பதற்காக தற்போது மூன்று 5 நட்சத்திர ஹோட்டலில் 100 அறைகள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு தரமான மருத்துவம் கிடைக்காத போது, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இதுபோல அதிக செலவில் சிகிச்சை செய்வதற்கு அனுமதி வழங்கிருப்பது ஏழை மக்களுக்கு செய்திருக்கும் துரோகம்.
இந்த நேரத்தில் மருத்துவம் பொதுவாகதானே இருக்கவேண்டும். ஆனால் இங்கு, ஏழை மக்களுக்கு ஒரு நீதி, அதிகாரிகளுக்கு ஒரு நீதியா? என கேள்வி டெல்லி அரசின் இந்த செயலுக்கு அம்மாநில மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.