அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. இந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழ் தேசிய தலைவராக மதிக்கப்படும் பிரபாகரன் குறித்து தவறுதலாக ஒரு வசனத்தை துல்கர் சல்மான் தனது 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் பேசியதாக கூறி தற்போது சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
இந்தநிலையில், அந்தக் காட்சிக்கு துல்கர் சல்மான் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் துல்கர் சல்மான், “வரனே அவஷ்யமுண்டு படத்தில் வரும் பிரபாகரன் நகைச்சுவைத் தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சிலர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அந்த செயல் வேண்டும் என்று செய்யப்பட்டது அல்ல. அது ‘பட்டண பிரவேஷம்’ என்றும் பழைய மலையாளப் படத்தில் வரும் நகைச்சுவை காட்சி அது.
அதுமட்டுமின்றி, இது கேரளாவில் மிகவும் பிரபலாக பயன்படுத்தும் மீம். தமிழ் உறவுகள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதற்கு எதிர்வினையாற்றும் பலரும் படத்தைப் பார்க்காமலேயே வெறுப்பை விதைக்கின்றனர். என்னையே என்னுடைய இயக்குநரையோ வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். தயவு செய்து அதனை எங்கள் அளவில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.
எங்கள் தந்தைகளையோ அல்லது மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம். அந்தக் காட்சியால் காயம்பட்ட நல்ல மற்றும் அன்பான தமிழ் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் மூலமாகவோ படங்கள் மூலமாக யாரையும் காயப்படுத்த நினைத்ததில்லை. இது உண்மையில் ஒரு தவறான புரிதல்” எனக் தெரிவித்துள்ளார். மேலும் அதில், 'பட்டண பிரவேஷம்' படத்தின் அந்த நகைச்சுவைக் காட்சியையும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.