அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அருவருப்பான செயல்பாட்டிலிருந்து மோடி அரசாங்கம் முக்கிய பாடங்களை கற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் "ஹைட்ராக்சி க்ளோரோகுயின்" மருந்து சரக்குகளை அமெரிக்காவிற்கு அனுப்பிய பின், தமிழகத்திற்கு வரவிருந்த சோதனை உபகரணங்கள் அமெரிக்காவிற்கு வழிமாற்றிவிடப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து இந்தியா "ஹைட்ராக்சி க்ளோரோகுயின்" மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததை, அரசாங்கத்திற்கு ஆதரவாக வாதிடுபவர்கள் அது மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்டது என சப்பைக் கட்டு கட்டினார்கள். அனால் இன்று அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ள உக்கிரம், அப்படிப்பட்ட மனிதாபிமானத்தை நாம் திரும்பி எதிர்பார்க்க முடியாது என்பதை தெளிவாக்குகின்றது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரியப் போர் காலத்து அமெரிக்க சட்டமான "பாதுகாப்பு உற்பத்தி சட்டம்" என்பதை அமலாக்கி, அமெரிக்க கம்பெனிகள் உள்நாட்டு தேவைக்காக அதிக அளவிலான மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்து வழங்க வேண்டும் எனக் கோரி, "நம் உள்நாட்டு பயனுக்காக இந்த உபகரணங்கள் வேண்டும். அவை நமக்காக இருந்தே ஆக வேண்டும்", என்று கூறி நியாயப்படுத்தியுள்ளார். ஆனால் இதேபோன்று தொற்று நோயை சமாளிக்க வேண்டி இந்திய அரசாங்கம் ஏப்ரல் 4 அன்று மருத்துவ ஏற்றுமதிகளுக்கு தடை விதித்தது. அனால் இந்தியாவை கடுமையாக வற்புறுத்தி, அமெரிக்கா அந்த தடையை மீறச் செய்துள்ளது.
இன்று, இந்தியா கொரோனா வைரஸ் சோதனைக்காக சீனாவிடமிருந்து பெறவிருந்த அதிவிரைவு சோதனை உபகரணங்கள் அமெரிக்காவிற்கு வழி மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அந்த உபகரணங்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் இப்படிப்பட்ட காலனிய கால அடாவடி உக்திகளால் இந்தியா மட்டும் பாதிக்கப்படவில்லை. பல நாடுகளும், தங்களின் உள்நாட்டு சுகாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக பெற வேண்டியிருந்த பாதுகாப்பு மற்றும் சோதனை உபகரணங்களை எவ்வாறு அமெரிக்கா தடுத்து நிறுத்தி தானே பெற்றுக்கொள்கிறது என்பதைப்பற்றி பல சர்வதேச ஊடகங்களும் வெளிப்படையாக்கி வருகின்றன. ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, பிரேசில், மற்றும் பரிதாபமான பார்பேடோஸ் ஆகிய நாடுகள், இது போன்ற அமெரிக்காவின் அடாவடித்தனத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.
அமெரிக்கா கியூபா மீது விதித்துள்ள அராஜகமான பொருளாதாரத் தடையை காரணம் காட்டி, கியூபா தன்னலமற்று தங்களின் மருந்துகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கியதை பெற்றுக்கொள்வதிலிருந்து மற்ற நாடுகளை தடுத்ததோடு, எந்தவித நிவாரணமும் கியூபாவை சென்றடைவதையும் தடுத்துள்ளது அமெரிக்கா. கியூபா இந்த கோவிட் நெருக்கடியை திறம்படச் சமாளித்ததோடு, மருத்துவத்தில் பிழையற்ற சர்வதேச ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தி வருகிறது. ஈரான் மீதான அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடையினால், எந்த விதமான உதவியும் ஈரானை சென்றடைவதிலிருந்து அமெரிக்கா தடுத்துள்ளதன் காரணமாக, பெரும் மனிதாபிமான நெருக்கடியை உண்டாக்கி, தடுத்திருக்கக்கூடிய இறப்புகள் ஏற்பட வழி வகுத்துள்ளது.
இப்படிப்பட்ட அடாவடித்தனங்களின் மூலமாக சுதந்திர நாடுகளின் உரிமைகளையும் இறையாண்மையையும் சீர்குலைக்கும் அமெரிக்காவின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. அமெரிக்காவின் இந்த கெடுபிடிகள், உலக சுகாதார அமைப்பு இந்த உலகத் தொற்றை சமாளிப்பதற்காக மீண்டும் மீண்டும் கோரி வரும் சர்வதேச கூட்டு முயற்சிக்கு நேர் எதிராக உள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இப்படிப்பட்ட அருவருப்பான செயல்பாட்டிலிருந்து மோடி அரசாங்கம் முக்கிய பாடங்களை கற்க வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகின்றது. அமெரிக்காவிற்கே அதீத முக்கியத்துவம் அளிக்கும் போக்கு, இந்திய மக்களுக்கு நிவாரணம் அளித்து, இந்த தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த எந்த வகையிலும் வழி வகுக்காது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.