கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்துவகையான போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சரியான நேரத்தில் வாகனம் கிடைக்காததாலும், ஆம்புலன்ஸ் கிடைக்காததாலும் உயிரிழந்த 3 வயது குழந்தையின் உடலை தாயே கையில் சுமந்த சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் மத்திய பகுதியான ஜெகனாபாத்தைச் சேர்ந்த தம்பதியின் 3 வயது குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் தர அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மற்ற வாகனங்களையும் தேடியுள்ளனர். ஊரடங்கால் எந்த வாகனமும் கிடைக்காத நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை தாயே தூக்கிக்கொண்டு சென்றுள்ளார்.
அப்போது செல்லும் வழியிலேயே குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது. எப்படியாவது குழந்தையைக் காப்பாற்றவேண்டும் என தாய் தனது மார்போடு அணைத்தபடி கண்ணீருடன் அழுதுகொண்டே குழந்தையை சாலையில் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், குழந்தையை கையில் ஏந்தியபடி செல்லும் அந்தத் தாய், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததே தனது குழந்தையின் இறப்புக்கு காரணம் என்று கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.
இந்த சம்பவத்தை அடுத்து இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜெகனாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட், இது குறித்த உண்மை நிலை எனக்கு தெரியவில்லை. உரிய விசாரணையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.