இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் கொரோனா வைரஸின் புகலிடமாக மாறி வருகின்றன. மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் முறையே முதல் 4 இடங்களில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் உள்ளது.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்களைக் கண்காணித்து பல்லாயிரக்கணக்கானோர் வீட்டிலும், மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், மருத்துவப் பணியாளர்களின் பங்களிப்பு எவ்வகையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறதோ, அதே அளவுக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பணியும் கருதப்படுகிறது.
ஆனால், அவர்களுக்கான போதிய பாதுகாப்பு உபகரணங்களான மாஸ்க், சானிடைசர், கையுறை போன்றவை முறையாக வழங்கப்பட வேண்டும் எனவும் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இப்படியான சூழலில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒப்பந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்19 ஆயிரத்து 221 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். GVK EMRI என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் அரசு ஒப்பந்த ஊழியர்களாக இந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பணியாற்றி வந்தார்கள்.
"மாதம் 10 முதல் 20 ஆயிரம் ரூபாய் முதல் சம்பளமாக ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி மாதம் முதல் சம்பளமே இல்லாமல் பணியாற்றி வருகிறோம். இது போக தற்போது கொரோனா வைரஸ் வேறு பரவி வருவதால், நோயாளிகளை அழைத்து வரும்போது எங்களுக்கென எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்கப்படுவதில்லை. உயிரைப் பணயம் வைத்தே இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறோம்" என ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரிஜேஷ் குமார் கூறியுள்ளார்.
மேலும், தங்களுடைய பிரச்னைகள் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங்கிடம் எடுத்துரைத்தபோது, நீங்கள் தனியார் நிறுவன ஊழியர்கள். ஆகவே உங்கள் நிறுவனத்தாரிடமே இதுகுறித்து கேட்கவேண்டும் என கைவிரித்ததாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதனையடுத்தே வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாகக் கூறிய பிரிஜேஷ் குமார், எங்களுடைய நிலுவை ஊதியத்தையும், பாதுகாப்பு உபகரணங்களையும் கொடுத்தால் மட்டுமே பணிக்கு திரும்புவோம். எங்களுடைய நிபந்தனைகளை நிறுவனம் கண்டுகொள்ளாவிட்டால் பணிக்குத் திரும்ப மாட்டோம் என GVK EMRIக்கு கடிதமும் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, உத்தர பிரதேசத்தில் 19 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளாது. இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாவிடில் வரும் நாட்களில் மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாக நேரிடும் எனக் கூறும் மருத்துவப் பணியாளர்கள் விரைவில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.