90's கிட்ஸ்களின் விருப்பமான ‘சக்திமான்’ தொடர், ஏப்ரல் 1 முதல் 1 மணிநேரம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
90’ஸ் கிட்ஸின் மனதிற்கு மிகவும் நெருக்கமான தொலைக்காட்சித் தொடர் ‘சக்திமான்’.என்னதான் ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட் மேன் என வகைவகையான சூப்பர் ஹீரோ படங்கள் வந்தாலும், இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோவான சக்திமானுக்கு இன்றைய இளைஞர்களான 90’ஸ் கிட்ஸின் வரவேற்பு உண்டு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்ட ‘சக்திமான்’ தொடர் 1997-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கி 2005-ம் ஆண்டு மார்ச் வரை ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பானது.
பலருக்கும் விருப்பமான சக்திமான், இப்போது 90’ஸ் கிட்ஸின் நினைவுகளாக மட்டுமே மிச்சமிருக்கிறது. இன்றளவும் 90’ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜியாவில் சக்திமானுக்கு நிரந்தர இடம் உண்டு.
இந்தத் தொடரில் ‘சக்திமான்’ கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்ததோடு, இந்தத் தொடரையும் தயாரித்திருந்தார். சமீப சில ஆண்டுகளாக ‘சக்திமான்’ தொடரை மீண்டும் ஒளிபரப்பு செய்யவேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கியிருக்கும் தற்போதைய சூழலில் ‘சக்திமான்’ மீண்டும் ஒளிபரப்பாகவிருக்கிறது.
ஊரடங்கு காரணமாக பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களை சில சேனல்கள் மறு ஒளிபரப்பு செய்து வருகின்றன. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம், மகாபாரதம் ஆகிய தொடர்கள் மீண்டும் ஒளிபரப்பாகின்றன.
சன் டி.வி-யில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவைப் பெற்ற ‘மெட்டி ஒலி’ தொலைக்காட்சித் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 1 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்நிலையில்தான், ‘சக்திமான்’ தொடரை மீண்டும் ஒளிபரப்பவிருக்கிறது தூர்தர்ஷன். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என முகேஷ் கண்ணா ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 1 முதல் பகல் 1 மணிக்கு ‘சக்திமான்’ தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பால் 90’ஸ் மட்டுமல்லாமல் அப்போது ‘சக்திமான்’ தொடரைப் பார்க்காமல் தவறவிட்டவர்களும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.