உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை 984 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கால் போக்குவரத்து வசதியின்றி டெல்லியில் சிக்கித் தவித்த அண்டை மாநில மக்கள் ஆயிரக்கணக்கானோர் நடந்தே சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கால் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து முனையத்தில் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தத்தம் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து நடந்து வந்து ஆனந்த் விஹார் பேருந்து முனையத்தில் குவிந்துள்ளனர்.
இதனால், மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்பதால் ஊரடங்கை அறிவித்த அரசு, இப்போது ஆயிரக்கணக்கானோரை ஒரே இடத்தில் குழுமச் செய்திருப்பது அரசின் பெரும் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் ஒரே ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தாலும், நிலைமை மிக மோசமாகும் எனவும் பலர் அச்சம் தெரிவிக்கின்றனர். கொரோனா அச்சத்தை நீக்கி, மக்களைக் காப்பாற்ற இந்த அரசு என்ன செய்யப்போகிறது என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வி.