உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 21, 200 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் 12 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 657ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவிவரும் வைரஸால் தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ குழுவினர் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹைட்ராக்சி குளோரோகுயினை கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக கொடுக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சிலும் அதே பரிந்துரையை செய்துள்ளது.
கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தர பரிந்துரைத்தது மத்திய அரசு. இந்நிலையில், தற்போது கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மலேரியா தடுப்பு மருந்தினை கண்மூடித்தனமாக பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில், மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை வாங்க மருந்தகங்களில் ஏராளமானோர் குவிந்தனர்.
இந்நிலையில், மருத்துவர் பரிந்துரையின்றி கண்மூடித்தனமாக அந்த மருந்தினை பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் பாதிப்புக்குள்ளாகி தொடர்ந்து கண்காணிப்பிலுள்ள குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சோதனை அடிப்படையில் அதனை பயன்படுத்துவதாகவும், அதனை அனைவராலும் பயன்படுத்த முடியாது என்றும் தன்னிச்சையாக மருந்துகளை கையாள்வது நிச்சயம் ஆபத்தில் முடியலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.