உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் பாதிப்புகளை ஏற்படுத்தத் துவங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்நோய் மேலும் வேகமாகப் பரவும் அபாயம் இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன் ஒருபகுதியாக தமிழக அரசும் மாநிலத்தின் எல்லைகளை மூடி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், ஜெர்மனியின் பவேரியா மாநிலம் அறிவித்ததைப் போல் தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை (முடக்கத்தை) அறிவிக்க வேண்டும்.
மாநில எல்லைகளை மூடினால் போதாது, ஊரடங்கை அறிவித்து அமல்படுத்த வேண்டும். ஊரடங்கைத் தவிர்க்க முடியாது. நாளை செய்ய இருப்பதை இன்றே செய்யலாமே? தமிழ்நாட்டு மக்கள் உலக நடப்புகளை அறிந்தவர்கள், புத்திசாலிகள். அரசு நடவடிக்கையைப் பாராட்டுவார்கள், ” எனத் தெரிவித்துள்ளார்.