இந்தியா

“கூலித் தொழிலாளர்கள் நிரம்பிய நாட்டில் work from home சாத்தியமா?” : மோடி உரையும் எழும் கேள்விகளும்!

அமைப்புசாரா தொழிலாளர்கள் நிறைந்த நாட்டில் "work from home" எப்படி சாத்தியம் என கல்லூரி மாணவர் ஒருவர் மோடி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

“கூலித் தொழிலாளர்கள் நிரம்பிய நாட்டில் work from home சாத்தியமா?” : மோடி உரையும் எழும் கேள்விகளும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

"கைதட்டுங்கள் மணி அடியுங்கள், மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள், மார்ச் 22 அன்று மக்களாகவே ஊரடங்கு உத்தரவை கடைபிடியுங்கள், யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள், வீட்டில் இருந்தபடி வேலை செய்யுங்கள்” - இப்படியான கவர்ச்சி வாசகங்களைத் தாண்டி அறிவியல்பூர்வமாகவோ, ஆக்கப்பூர்வமாகவோ எந்த அறிவிப்பையும் பிரதமர் மோடியின் உரையில் காணமுடியவில்லை.

மேலும், இதுவரை நமக்கு அறிவியல் உதவி செய்யவில்லை என்று போகிறபோக்கில் வார்த்தைகளை உதிர்த்துச் சென்றிருக்கிறார். அறிவியலுக்கு மாற்றாக கோமியத்தை முன்வைப்பவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். மருத்துவர்களோ, தூய்மைத் தொழிலாளர்களோ... அனைவருமே போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், உண்மையில் அந்த பணியாளர்களுக்கான தேவைகளை, வசதிகளை அரசு பூர்த்தி செய்துள்ளதா? ஒருநாள் சுய ஊரடங்கை அமல்படுத்தி பரிசோதனை என்று பிரதமர் பேசுகிறார். உண்மையாகவே பரிசோதனை செய்கிற கட்டத்திலா நாம் உள்ளோம்!? அதிரடியான அறிவியல்பூர்வமான நடவடிக்கைகளின்றி வேறெதுவும் காப்பாற்ற முடியாத சூழலில் நாம் உள்ளோம்.

“கூலித் தொழிலாளர்கள் நிரம்பிய நாட்டில் work from home சாத்தியமா?” : மோடி உரையும் எழும் கேள்விகளும்!

ஒரு கொடும் போரோ, கொடிய நோயோ எதுவாகினும் பெரும் பாதிப்பு என்னவோ ஏழைகளுக்குத்தான். ஆம், ‘கோவிட்-19’ என்ற கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி 2 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதித்து ஆயிரக்கணக்கானோரை உயிர் பலி வாங்கியிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 206 பேருக்கு இந்நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில்தான் நேற்றைய பிரதமர் உரை, நாம் மற்ற நாடுகளின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுள்ளோமா என்ற பெருத்த சந்தேகத்தை கிளப்புகிறது.

ஏனெனில், இந்தியா உழைக்கும் சக்தியில் உலகில் இரண்டாவது மிகப்பெரிய நாடு. இந்தியாவின் மொத்த தொழிலாளர்களில் 94% பேர் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர். அதுமட்டுமன்றி மிக நெரிசல் மிகுந்த தொழில் நகரங்களை, மக்கள் வாழ்விடங்களை கொண்ட நாடு இந்தியா. வீடற்று தெருவோரங்களில் வாழும் மக்கள் சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் அதிகமாகவும் நாடு முழுவதும் ஒரு கணிசமான அளவிலும் உள்ளனர்.

மீதம் பலர் வீட்டில் வசிப்பினும் அடிப்படை வாழ்வாதாரமின்றி அன்றைக்கு வேலைக்குச் சென்றால்தான் உணவு உண்ண முடியும் என்ற நிலையில் அன்றாடங்காய்ச்சிகளாக உள்ளனர். நிலை இப்படியிருக்க வைரஸ் பரவுவதை தடுக்க ஆட்சியாளர்கள் பல முயற்சிகளை எடுப்பினும் அவை சரியானவையா என்ற கேள்வியே இப்போது முக்கியம்

ஆம், இந்த 94% மக்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக இருக்கும் நாட்டில் "work from home" என்று கூறுவது உதவாது. பிறகு சீனாவைப் போல நாமும் ஒட்டுமொத்த நாட்டையும் இழுத்து மூட வேண்டுமா என்றால், ஆம். வைரஸ் பரவுவதை தடுக்க அதைச் செய்துதான் ஆக வேண்டும். ஆனால் நடைமுறை சிக்கல் என்னவென்றால் ஒருபுறம் வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி வீட்டிற்குள் பதுங்கினால், மறுபுறம் "பசி" என்னும் கொடிய வைரஸால் மக்கள் பலர் குறிப்பாக ஏழைகள் செத்து மடிவர். வீடற்றவர்களின் நிலை என்பது இன்னும் கேள்விக்குறியின் உச்சம்.

“கூலித் தொழிலாளர்கள் நிரம்பிய நாட்டில் work from home சாத்தியமா?” : மோடி உரையும் எழும் கேள்விகளும்!

இரயில்வே பிளாட்பார டிக்கெட்டை பல மடங்கு விலை உயர்த்துவதும், வெற்று அறிவிப்புகளை வெளியிடுவதும் வெளியே வரும் மக்களை வீட்டில் இருத்திவைக்கப் போதுமானது என நினைத்துவிட்டது போல அரசு. மருத்துவரீதியில் சில மாநிலங்களில் குறிப்பிடத் தகுந்த முயற்சிகளை எடுத்து வந்தாலும் அது போதுமானதாக இல்லை.

குறிப்பாக மக்களின் சுய சுகாதாரம் குறித்து போதிக்கும் அரசு, அரசு மருத்துவமனைகளில் கழிவறை எந்தளவு சுத்தமாக இருக்கிறது என்று தன்னைத் தானே கேள்வியெழுப்ப வேண்டிய நேரம் இது. சென்னையில் உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்ததாரரின் கீழ் பணிபுரிவதால் பல நாட்களுக்கு சம்பளம் தரப்படாததால் கடந்த இருநாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் தூய்மை ஊழியர்கள் ஒப்பந்ததாரர்களின் கீழ் வேலை செய்வதால் சம்பள பிரச்னை நீண்ட நாட்களாகவே தொடர்ந்து வருகிறது.

சட்டமன்றத்தில் துப்புரவு பணியாளர்களை "தூய்மைப் பணியாளர்கள்" என்று பெயர் மாற்றம் செய்வது மட்டும் போதாது, அனைத்து வகையான தூய்மைப் பணியாளர்களையும் அரசே நேரடியாக நியமனம் செய்ய வேண்டும். அதுவே, இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும். ஏனெனில் இதுபோன்ற அசாதாரண சூழலில் அவர்களின் பங்கு அளப்பறியது.

எல்லா கடைகளையும் மூடச் சொல்லும் அரசு, குறிப்பாக தமிழக அரசு டாஸ்மாக் சாராயக் கடைகளை மட்டும் மூட உத்தரவிடுவதில் இவ்வளவு தயக்கம் காட்டுவது ஏன்? எத்தனை ஏழை குடிமகன்கள் குடித்துச் செத்தாலும் சரி, கொரோனோவால் செத்தாலும் சரி, வருமானத்திற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்ற மோசமான எண்ணத்தின் வெளிப்பாடாகவே காட்சியளிக்கிறது இந்த தயக்கம். குறிப்பாக பிரதமர் உரையில் 65 வயதுக்கு மேலான வயோதிகர்கள் வெளியே வரக்கூடாது என்று கூறியுள்ளார்.

“கூலித் தொழிலாளர்கள் நிரம்பிய நாட்டில் work from home சாத்தியமா?” : மோடி உரையும் எழும் கேள்விகளும்!

இந்தியாவில் முதுமையில் தனித்துவிடப்பட்டு சாலையோரங்களில் கூலித் தொழிலாளர்களாகவும், அமைப்பு சாரா தொழிலாளர்களாகவும் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களின் நிலை கேள்விக்குறிதான்?!

முதலில் அனுபவ படிப்பினை அவசியமான ஒன்றாகும். நியூசிலாந்து அரசு இந்தியாவைவிட மக்கள்தொகையில் மிகக் குறைந்தது. வெறும் ஐம்பது லட்சத்திற்கும் குறைவான மக்களைக் கொண்டது. ஆனால் அந்த நாடு அந்த நாட்டில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கு மட்டும் 5.4 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% ஒதுக்கியுள்ளது.

நம் கேரளா அரசும் 20 ஆயிரம் கோடி ரூபாயை நிவாரணத்துக்காக மட்டும் ஒதுக்கியுள்ளது. ஒரு மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்களை முன்னதாகவே கொடுப்பது, பென்ஷன் பெறுவோருக்கு 2 மாத தொகையை முன்னதாகவே கொடுப்பது, பென்ஷன் வாங்காத குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி, மருத்துவ உதவிக்கு 500 கோடி, குடும்பங்களுக்கு தேவைப்பட்டால் கடனாக பெற்றுக்கொள்ள 2,000 கோடி ஒதுக்கியுள்ளது. இதுதான் சிறந்த மக்கள் நல அரசுக்கான உதாரணம்.

இப்படித்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருபுறம் வைரஸுக்கு எதிரான போரையும், மறுபுறம் மக்களின் ஏழ்மை மற்றும் பசிக்கு எதிரான பொருளாதார போராட்டத்தையும் ஒருசேர நடத்தவேண்டும். மருத்துவ முகாம்களுடன் கூடிய நிவாரண முகாம்களையும் அமைக்கவேண்டும். நிவாரண முகாம்கள், தொண்டர்கள் மூலம் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

“கூலித் தொழிலாளர்கள் நிரம்பிய நாட்டில் work from home சாத்தியமா?” : மோடி உரையும் எழும் கேள்விகளும்!

தமிழகம், கேரளா மாநிலங்களில் அங்கன்வாடி மையங்களில் பணியாளர்கள் குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று சத்துணவுகளை வழங்கிய முறை பாராட்டுக்குரியது. இதேபோல், அத்தியாவசிய தேவைகளை மக்களுக்கு அரசு விநியோகம் செய்யவேண்டும். கோமியத்தையும், சாணத்தையும் நம்பாமல் அறிவியல் தொழில்நுட்பங்களையும், மருத்துவ வசதிகளையும் பயன்படுத்தினாலொழிய மக்கள் வீடுகளில் தங்குவதை உறுதி செய்ய முடியாது, வைரஸ் பரவுவதையும் தடுக்க முடியாது.

இறுதியாகச் சொல்லவேண்டுமானால் அரசு இங்கு இரண்டு முகமாக உள்ளது. ஒன்று பணக்காரர்களையும் முதலாளிகளையும் பாதுகாக்க செயல்படுவதாகவும் , மறுபுறம் உழைப்பாளி மக்களிடமும் , கூலித் தொழிலாளர்களிடமும் பாரபட்சம் காட்டுவதாகவும் உள்ளது.

இத்தகைய மோசமான சூழலில் இந்த பாரபட்சம் கடந்து அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை சமத்துவ கண்ணோட்டத்துடன் மேற்கொள்ளவில்லை எனில் பெரும் இழப்பைத் தடுக்க முடியாது.

- சுபாஷ், கல்லூரி மாணவர்.

banner

Related Stories

Related Stories