உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், அவரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். மாநிலங்களவைக்கு இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூகசேவை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் 12 பேரை நியமன உறுப்பினராக நியமிப்பது வழக்கம்.
இந்த நிலையில் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக இருந்த மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்ஷி ஓய்வு பெற்றதை அடுத்து காலியான இடத்திற்கு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர், அயோத்தி பிரச்னை, ரஃபேல் ஒப்பந்த முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கினார். இவரின் எம்.பி பதவிக்கு தற்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் ரஞ்சன் கோகாய் குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் 20 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 20 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளேன். ஆனால், எனது நீண்ட அனுபவத்தில், ரஞ்சன் கோகாய் போன்ற சிறிதும் வெட்கமற்ற, இழிவான ஒரு நீதிபதியை தான் பார்த்ததில்லை.
பாலியல் வக்கிரங்களை கொண்ட ரஞ்சன் கோகாயிடம் இல்லாத கெட்ட குணங்கள் எதுவுமில்லை. அப்படி ஒருமோசமான, முரட்டுக்குணம் இந்திய நாடாளுமன்றத்தை அலங்கரிக்கப் போகிறது” என மோசமாக விமர்சித்துள்ளார்.