நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனையை நிறைவேற்ற விடாமல் குற்றவாளிகள் நால்வரும் தனித்தனியே கருணை மனு தாக்கல் செய்தனர். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (மார்ச் 20) காலை 5.30 மணியளவில் அவர்களைத் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், குற்றவாளிகள் நால்வரில் ஒருவரான அக்ஷய் தாக்கூரின் மனைவி புனிதா, பீகார் மாநிலம் அவுரங்காபாத் குடும்பநல நீதிமன்றத்தில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், “ என் கணவர் குற்றமற்றவர் என எனக்குத் தெரியும். ஆனால், அவரை தூக்கிலிட்ட பிறகு நான் வாழ்நாள் முழுவதும் கைம்பெண்னாக வாழ விருப்பமில்லை. ஆகையால் எனக்கு விவாகரத்து வழங்குங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாகப் பேசியுள்ள புனிதாவின் வழக்கறிஞர், இந்திய இந்து திருமணச் சட்டம் 13(2)(II) அடிப்படையில் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு ஆளான கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்க மனைவிக்கு உரிமை உள்ளது. அதன்படியே வழக்கு தொடரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் நாளை (மார்ச் 19) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.