நாடாளுமன்ற மக்களவையில் இன்று அரசு அலுவல் மொழி தொடர்பான கேள்விக்கு மத்திய இணையமைச்சர் நித்தியானந்த் ராய் பதிலளித்தார். இதையடுத்து, அதில் துணைக் கேள்வி கேட்க தி.மு.க எம்.பி.க்கள் முயன்றனர். ஆனால், இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
இதற்கு தி.மு.க மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி எழுந்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வு சார்ந்த விஷயம் இது. எனவே, துணைக் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதை சபாநாயகர் ஏற்காதததால், தி.மு.க, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கான பதில் தரப்படும்போது, அதில் சந்தேகம் எழும்போது துணைக் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட வேண்டும்.
சபாநாயகர் என்னைப் பேச அனுமதிக்காமல் இருக்கலாம். எனது உரிமைகள் முடக்கப்படலாம். ஆனால் தமிழ்மொழி தொடர்பாக கேள்வி கேட்பதற்கு, மொத்த தமிழ்நாட்டு மக்களும் விரும்புகிறார்கள். அந்த உணர்வுகளை சபாநாயகர் புரிந்து கொள்ளவில்லை.
இது தமிழக மக்கள் மற்றும் தமிழ்மொழி உரிமை சார்ந்தது. தங்களது மொழி மீது பற்று கொள்ள அவர்களுக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. தமிழ் மக்களின் உரிமையை நீங்கள் பறிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.