கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த யெஸ் வங்கியை கடந்த 5ம் தேதி ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததோடு, வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதிலும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, வருகிற ஏப்ரல் 3 வரை ரூ.50,000க்கு மேல் யெஸ் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாது எனத் தெரிவித்திருந்தது.
அதன் பின்னர், யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் பல்வேறு நிறுவனங்களுக்கும் கடனாக பெரும் தொகையை வழங்கியது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ விசாரணையின் மூலம் வெளிவந்தது. பின்னர், ராணாவின் மனைவின் பிந்து கபூரின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது.
இதனால், ராணா கபூரின் மனைவி, மகள்கள் மூவர் என அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது சி.பி.ஐயும், அமலாக்கத்துறையும். இதற்கு பிறகு, யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 18ம் தேதி விலக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், யெஸ் வங்கியில் பெற்ற கடன்கள், சட்டவிரோத பண பரிமாற்றங்களில் ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மனான அனில் அம்பானியும் சிக்கியுள்ளார். இதனையடுத்து, விசாரணைக்காக மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லை என காரணம் சொல்லி ஆஜராவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார் அனில் அம்பானி. இவர் மட்டுமல்லாது, ரிலையன்ஸ் குழுமத்தின் மற்ற அதிகாரிகளும் விரைவில் விசாரிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.