நாடு முழுவதும் எஸ்.சி. மற்றும் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வித்தொகை வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த திட்டத்தில் ஆண்டுதோறும் 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். இதில், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் 2 லட்சத்து 56 ஆயிரம் பேரும், உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் 4 லட்சத்து 63 பேரும் பயன் அடைந்து வருகின்றனர்.
இந்த திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. இந்நிலையில், எஸ்.சி. மற்றும் ஓ.பி.சி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது.
இதில், மாநிலங்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு மாதங்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மத்திய அரசின் இந்த புதிய திட்டத்தின் படி நாடு முழுவதும் அனைத்து பிரிவு மாணவர்களையும் உள்ளடக்கிய வகையில் கல்வித்தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இவற்றில் எஸ்.சி. பிரிவு மாணவர்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய திட்டத்தின் படி பெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய் இருக்கும் மாணவர்கள் உதவித்தொகையை பெற்று வந்தார்கள். ஆனால், புதிய திட்டத்தின் படி, கல்வித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் அகில இந்திய அளவில் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வித்தொகை வழங்கப்படும். பழைய திட்டத்தின் படி பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர் ஆண்டுதோறும் 87 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெற்று வருகிறார். அதேநேரம், புதிய திட்டம் நடைமுறைக்கு வரும்போது பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவர் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே உதவித்தொகை பெற முடியும்.
மோடி அரசு செயல்படுத்தவுள்ள இந்த புதிய திட்டத்துக்கு சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடுவதை உடனடியாக கைவிடவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.