கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370வது பிரிவை நீக்கி, இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது மோடி அரசு. இதற்கு காஷ்மீர் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
ஆறு மாத சிறைக்காவல் முடிவடைந்த நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
சுமார் 7 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பலமுறை இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்தினார்.
புதிய புதிய காரணங்களை செயற்கையாகக் கண்டுபிடித்து காஷ்மீர் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை கைவிடுமாறும், காஷ்மீரில் ஜனநாயகக் காற்றை அனைத்துத் தரப்பு மக்களும், எந்தவிதத் தடையுமின்றிச் சுவாசிக்க இடமளிக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவலை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து 7 மாத வீட்டுச் சிறைக்கு பின்னர் ஃபரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது :
“காவலில் இருந்து ஃபரூக் அப்துல்லாவை விடுவித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. கடும் சோதனையை எதிர்த்து ஃபரூக் அப்துல்லா பெற்ற வெற்றி ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீதான நம்பிக்கையை நிரூபிக்கிறது.
உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட காஷ்மீர் தலைவர்களையும் உடனடியாக விடுவிக்கவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.