உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 60க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், இந்தியாவில் இருந்து பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்லாத வகையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்கையில், இந்தியாவில் வருகிற மார்ச் 29ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரத்தோடு காத்திருக்கிறார்கள். அதிலும் சென்னை அணியின் கேப்டன் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு பரவுவதால் போட்டிகள் தடைபடுமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மார்ச் 29 முதல் மே 24 வரை நடக்கவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி அலெக்ஸ் பென்சகிர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், “மார்ச் 29 முதல் மே 24 வரை நடக்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை காண 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான ரசிகர்கள் மைதானத்தில் ஒரே நேரத்தில் திரளக் கூடும் என்பதால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் இருந்தால், இந்த வைரஸ் வேகமாக பிறருக்கு பரவத் தொடங்கி விடும்.
மிகப்பெரிய ஆபத்தை தவிர்க்க, இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மும்பையில் நடக்கவுள்ள முதல் ஐபிஎல் லீக் போட்டி உட்பட அனைத்து போட்டிகளையும் ரத்து செய்ய அம்மாநில அரசு ஆலோசித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், பிசிசிஐ தலைவர் கங்குலி, போட்டிகளை ரத்து செய்ய எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், கொரோனா பரவாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.