இடைநீக்கம் செய்யப்பட்ட 7 உறுப்பினர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும் என மக்களவையில் தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.
இன்று மக்களவை கடும் அமளிக்குப் பிறகு மீண்டும் கூடியபோது, திராவிட முன்னற்றக் கழகத்தின் சார்பில் பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இடைநீக்கம் செய்யப்பட்ட 7 உறுப்பினர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
தயாநிதி மாறன் எம்.பி., பேசியதாவது :
“தி.மு.க சார்பிலும், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பிலும் கேட்டுக் கொள்வதெல்லாம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏழு பேர் மீதான நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்பதுதான்.
இந்த அவையில் உள்ள அனைவரும் நல்ல நண்பர்கள்தான் என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவைக்குள் நம் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நிலைக்கு தள்ளப்படும்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இடையே லட்சுமண ரேகை நடுவில் இருப்பதாக எப்போதும் கேள்விப்பட்டதில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை என்பது விசித்தரமான ஒன்று.
பல ஆரோக்கியமான விவாதம் இந்த அவையில் நடந்தேறியுள்ளது, நேற்றைக்குக் கூட உலகையே உலுக்குகின்ற கொரோனா வைரஸ் பற்றிய விவாதத்தை சுகாதாராத் துறை அமைச்சர் துவங்கி இந்த அவையிலே துவக்கி வைத்தார், எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்களும் அந்த விவாதத்தில் பங்குப் பெற்றோம், அப்போது, அவை நடவடிக்கைக்கு அமைதியான முறையில் முழு ஒத்துழப்பைத் தந்தோம்.
ஆனால் அதே சமயம், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மத கலவரத்தின் போது 50 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப் பட்டுள்ளார்கள். அந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என நியாயமான வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் என்ன நடந்தது, அது சமயம் அவைக்கு வந்து அச்சம்பவம் பற்றிய உரிய பதில் கூற வேண்டிய இந்நாட்டின் உள்துறை அமைச்சரும் பாராளுமன்றத்திற்கு வரவில்லை, பதில் கூற வேண்டிய நாட்டின் பிரதமரும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவில்லை எனும்போது உள்ளபடியே எதிர்கட்சி உறுப்பினர்கள் உணர்ச்சிவசப்படுவது தானே இயல்பு. அதைத்தான் செய்தார்களே தவிர அவையை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு அல்ல, நம் பாராளுமன்ற நடைமுறை என்பது, ஓர் ஜனநாயக நடைமுறைக்கு உட்பட்டது ஆகும்.
எதிர்கட்சிகள் அனைவரும் குறிப்பிட்ட அந்த பிரச்னையை உங்களது கவனத்திற்கு கொண்டு வரவும், நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் கவனத்தை ஈர்த்திடும் வகையில் இதுமாதிரியான எதிர்ப்புகளை பாராளுமன்ற அவையில் கையாண்டோம் என்பதை தவிர வேறு உள் நோக்கம் இல்லை, எனவே தயவு கூர்ந்து அவர்கள் மீதான நடவடக்கையைத் திரும்பப்பெற்று, மீண்டும் இந்த அவையில் அவர்களை ஜனநாயக கடமையை ஆற்றவிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என வேண்டுகோள் விடுத்தார்.