நாடு முழுவதும் சாதி மறுப்புத் திருமணத்துக்கும், மதம் கடந்த திருமணத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து வன்கொடுமைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இதனை சட்டரீதியாகவும், சமூகரீதியாகவும் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
மாற்று சாதியினரையோ, உயர்சாதியினரையோ திருமணம் செய்துகொள்வோர் மீது கொலை வெறித்தாக்குதலும், சமயத்தில் கொலை செய்யும் செயல்களாலும் சமூகத்தில் நாளுக்கு நாள் வன்மம் தழைத்தோங்கி வருகிறது. இதனால், மிகப்பெரிய சமூக சீர்கேடுகளும் ஏற்பட்டு வருகிறது.
இதுபோன்ற செயல்களால் காதலித்து கரம்பிடித்தவர்களின் வாழ்க்கை பெற்றோர்களாலும், உற்றார்களாலும் கேள்விக்குறியாகி வருவதோடு, பெரும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகின்றனர்.
இதனைத் தடுக்கும் வகையில் கேரள மாநிலத்தில் சாதி, மதம் கடந்து திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கென பாதுகாப்பான இல்லங்களை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாகப் பேசியுள்ள கேரள சமூகநலத் துறை அமைச்சர் ஷைலஜா, “சாதி, மதங்களைக் கடந்து காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள தம்பதியினரை பெற்றோர்களே ஒதுக்கி வைப்பதும், அவர்களால் அச்சுறுத்தப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
ஆகையால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓராண்டு காலம் வரை தங்கிக்கொள்ளும் வகையில் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது” என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.