மத்திய பிரதேசத்தில் உள்ள கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ஒரு எம்.எல்.ஏ-வுக்கு ரூ.35 கோடி பா.ஜ.க பேரம் பேசியுள்ளதாக காங்கிரஸின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பா.ஜ.க, தாங்கள் ஆட்சியமைக்காத மாநிலங்களில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை குதிரை பேரத்தின் மூலம் தங்கள் பக்கம் இழுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அண்மையில் கர்நாடக மாநிலத்திலும் இதே செயலைக் கடைபிடித்து தற்போது எடியூரப்பா தலையிலான பா.ஜ.க அரசு ஆட்சி செய்து வருகிறது.
அதேபோல, மத்திய பிரதேசத்தில் உள்ள கமல்நாத்தின் அரசை குலைப்பதற்கான சதி வேலைகளில் இறங்கியுள்ளது பா.ஜ.க. அதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு தலா 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் முன் பணமாக 5 கோடி ரூபாய் அளிக்க பா.ஜ.க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.ட்
இந்த பணிகள் ம.பியின் முன்னாள் பா.ஜ.க முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்று வருகிறது எனவும் திக்விஜய் சிங் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்திந்த அம்மாநில முதலமைச்சர் கமல்நாத், “மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வெல்லும் சூழல் வந்திருப்பதால் அதனைக் குலைப்பதற்காக பா.ஜ.கவினர் பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எங்கள் எம்.எல்.ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாக பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தியதாக என்னிடம் கூறினார்கள். இனாமாக கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் என அவர்களிடம் சொல்லியனுப்பினேன். ஆட்சி பறிபோகும் என்ற அச்சம் எங்களுக்கு இல்லை” எனக் கூறியிருக்கிறார்.