அமெரிக்க கோழி விற்பனையை இந்தியாவில் அனுமதிக்கும் வகையில் இறக்குமதி வரியைக் குறைக்க மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு கோழிப்பணை உரிமையாளர்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வரும் திங்கட்கிழமை இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் சில வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
அதில் ஒன்று அமெரிக்க கோழிகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது என்று கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் டொனால்டு ட்ரம்ப் தனது தேர்தல் லாபத்துக்காக அமெரிக்க கோழி பண்ணைத் தொழிலை இந்தியாவில் திணிக்க முயற்சிக்கிறார். இதற்கு இந்தியா அடிபணியக் கூடாது என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளனர்.
கோழிப்பண்ணை தொழில் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இரண்டு கோடிப் பேர் இந்தத் தொழில் மூலம் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.
அமெரிக்க கோழிப்பண்ணை தொழிலை இந்தியாவில் அனுமதித்தால் கோழி, முட்டை உற்பத்தி தொழில் பாதிப்புக்குள்ளாகும். மேலும், 2 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே, அமெரிக்க கோழி விற்பனையை இந்தியாவில அனுமதிக்கக் கூடாது என்று கடிதம் மூலம் பிரதமர் மோடியைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.