தற்போதுள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களை திருத்தி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களை அமலாக்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள, திருத்தி அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு மானிய திட்டங்களில் மத்திய அரசின் பங்கு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதால் இந்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.
பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள், பயிர்களுக்கு இனி இன்சூரன்ஸ் செய்வது கட்டாயமில்லை என்று கூறப்படுவதால், அவர்களுக்கு காப்பீடு உத்தரவாதமற்ற நிலைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் அச்சம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
உறுதியான பாசன வசதி இல்லாத நிலங்களில் விவசாயம் செய்பவர்களுக்கு பயிர் இன்சூரன்ஸ் திட்டமே பாதுகாப்பு என்று உணர்ந்து அத்திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது.
அத்திட்டத்தை பா.ஜ.க அரசு நீர்த்துப் போகச் செய்து, இப்போது முற்றிலும் குலைக்க முடிவெடுத்திருக்கிறது. இன்சூரன்ஸ் பிரிமியத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இனி குறைக்கப்படுகிறது.
வங்கிக் கடன் பெறும் விவசாயிகளுக்கு இனி பயிர் இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமில்லை. இந்த மாற்றங்களின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். பயிர் இன்சூரன்ஸ் பெற்ற நிலங்களின் பரப்பளவு ஏற்கனவே குறைவு. இது மேலும் குறையும். பாதிக்கப்படப்போவது விவசாயிகள் தாம்.” எனத் தெரிவித்துள்ளார்.