நாட்டில் குலக் கல்வியை கொண்டு வரும் நோக்கில், புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த பா.ஜ.க அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால் ஏழை எளிய குழந்தைகள் கல்வி வாசமே இல்லாமல் போவதற்கு வழிவகுக்கும் என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அகமதாபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத், அதிக கல்வி அறிவு வந்ததாலேயே விவாகரத்துகள் அதிகரித்துள்ளன எனப் பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
மேலும், “நன்கு படித்த, வசதியுடையவர்களின் குடும்பத்திலேயே விவாகரத்துகள் அதிகம் நடக்கின்றன. இந்த கல்விச் செல்வத்தினால் மக்களுக்கு ஆணவம் அதிகரித்துவிட்டது. இதனால் குடும்பங்களில் பல்வேறு மனச்சிக்கல்கள், விரிசல்கள் ஏற்படுகின்றன. படிப்பறிவு அதிகரித்ததால் தன்னால் எதையும் செய்யமுடியும் என நினைக்கிறார்கள்.
இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு அறிவொளியாக இருக்கவேண்டும். குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் சமூகமும் நன்றாக இருக்கும். இந்து சமூகத்தை தவிர இந்தியாவிற்கென வேறு வழியில்லை.” என மோகன் பகவத் கூறியுள்ளார்.
இவரது இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மோகன் பகவத்தின் பேச்சு பிற்போக்குத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் உள்ளது என பாலிவுட் நடிகை சோனம் கபூர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேபோல, வி.சி.க பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் “காட்டுமிராண்டிகளாகவே இருக்க விரும்பினால் காட்டுக்குப் போய்விடுவதே உத்தமம், நாட்டை காடாக்கக் கூடாது” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.