கர்நாடகாவின் கலாபுராகி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் பாடீல். இவர், கடந்த 1997ம் ஆண்டு போஸ்கோ என்ற பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்து வந்துள்ளார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள அசோக் என்பவரின் வீட்டிற்கு அருகே குடியிருந்தபோது, அசோக்கின் மனைவி பத்மாவதியுடன் நட்புறவு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறியிருக்கிறது. இதனையறிந்த அசோக், பத்மாவதியையும், சுபாஷ் பாடீலையும் கண்டித்திருக்கிறார்.
இதனையடுத்து, கடந்த 2002ம் ஆண்டு ஜூலை 15ம் தேதியன்று பத்மாவதியும், சுபாஷூம் கூட்டுச் சேர்ந்து அசோக்கை கொலை செய்துள்ளனர். அப்போது இரண்டாமாண்டு மருத்துவம் படித்து வந்த சுபாஷ் அசோக்கை கொலை செய்ததன் மூலம் பெங்களூருவில் உள்ள பரபப்பன அக்ரஹாரா சிறையில் 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பத்மாவதிக்கும் இதே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
கொலை வழக்கில் சிறை சென்றபோது, தன்னுடைய மருத்துவர் கனவை விட்டுக்கொடுக்காத சுபாஷ் பாடீல், சிறை மருத்துவர்களுக்கு உதவியும், சிறையில் காசநோயால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு வைத்தியம் பார்த்தும் வந்திருக்கிறார். இதனால் சிறை நிர்வாகத்தின் பாராட்டுதலுக்கு ஆளாகியுள்ளார்.
பின்னர், நன்னடத்தை காரணமாக கடந்த 2016ம் ஆண்டு விடுதலையான சுபாஷ் பாடீல், தான் ஏற்கெனவே மருத்துவம் படித்த ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை தொடர்ந்து 2019ம் ஆண்டில் MBBS படிப்பை முடித்துள்ளார். அதனையடுத்து, மருத்துவராவதற்கான பயிற்சியை மேற்கொண்ட அவர், ஓராண்டு பயிற்சியை முடித்து தற்போது தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது குறித்து பேசிய சுபாஷ் பாடீல், தான் சிறையில் இருந்த போது பெரும்பாலும் சிறை நூலகத்தில் படித்து கொண்டிருந்ததாக கூறினார். மேலும், மருத்துவரானதும் மக்களுக்கு சேவை செய்து கொண்டே இருப்பேன் என்றும், குறிப்பாக சிறைவாசிகள், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தனது சேவையை அர்ப்பணிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.