மக்களை மத ரீதியாக பிரித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் வகையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது மத்திய பா.ஜ.க. அரசு. இந்த சட்டத் திருத்தத்திற்கு நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கிய எதிர்ப்பு குரல் தற்போது வீரியமடைந்திருக்கிறது.
அசாமில் தொடங்கிய இந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டெல்லியில், ஜாமியா பல்கலை., மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது மோடி அரசு. அதன் பிறகு டெல்லியின் ஷாகீன் பாக் பகுதி கடந்த இரண்டு மாதங்களாக போர்க்கோலம் பூண்டிருக்கிறது. இஸ்லாமிய பெண்களின் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நாள்தோறும் பல்வேறு நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்துக்களின் இறுதி ஊர்வலத்துக்கு வழி விடுவதும், இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள் போராட்டக்காரர்களை பாதுகாத்து அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வது என பல நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நாட்டில் மதச்சார்பின்மை மடிந்துவிடவில்லை என்றும், இந்துத்வா கும்பலின் மதவெறி மக்களிடம் எடுபடாது என்றும் பொட்டில் அறைந்தார் போன்று எடுத்துரைத்து வருகிறது.
இதுபோல, மற்றுமொரு நெகிழ்ச்சியான சம்பவம் ஷாகீன் பாக் போராட்டத்தில் நடைபெற்றுள்ளது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.எஸ்.பின்த்ரா என்பவர் போராட்டக்காரர்களுக்கு உணவு (லங்கர் - சீக்கிய மொழியில்) அளிப்பதற்காக தனது அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றில் ஒன்றை விற்பனை செய்திருக்கிறார். அவரது பிள்ளைகளும், போராட்டக்காரர்களுக்கு உதவுவதற்காக குருத்வாராவுக்கு சேர்த்து வைத்த பணத்தை அளித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், முஸ்தஃபாபாத், குரேஜி ஆகிய பகுதிகளிலும் பிந்த்ரா உணவு வழங்கி வருகிறார். இவரது இந்த செயல் தெற்கு டெல்லி முழுவதும் பரவி, பாராட்டை பெற்று வருகிறார். மேலும், இவர் உணவு வழங்குவது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.
வழக்கறிஞர் டி.எஸ்.பிந்தரா, நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஓவைசியின் A.I.M.I.M கட்சியில் பொருளாளராகவும் பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.