மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், நாட்டில் உள்ள ஏழை மக்களும், சிறு - குறு தொழில் செய்வோருக்கும் எந்தவித பயனும் அளிக்கவில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.
அதுமட்டுமின்றி, சமூக பாதுகாப்பு, வேலைவாய்ப்பு போன்ற திட்டங்களில் அரசு கவனம் செலுத்தாததன் விளைவாக பட்ஜெட்டிலும் அரசு வேலை வாய்ப்பை உருவாக்குவது பற்றியும், வேலையின்மையை கட்டுப்படுத்தவது பற்றியும் எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை என ஜனநாயக அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் மோடி அரசு பரிதாபகரமான தோல்வியை கண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னுடைய இந்த கேள்விக்காக பயப்பட வேண்டாம். ஏனெனில் நான் நாட்டில் உள்ள இளைஞர்கள் சார்பாகவே இந்த கேள்வியை கேட்கிறேன்.
இதற்கு பதில் சொல்லும் பொறுப்புடையவர் யார்? நாட்டில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பை விரும்புகிறார்கள். ஆனால் உங்கள் அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பரிதாபமான தோல்வியை அடைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.