ஆந்திரா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தின் தாரபர்த்தி பஞ்சாயத்தில் துங்கடா பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கேட்டு அவர்கள் போராடிவருகின்றனர். இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான ஜரதா நாகராஜ் என்பவர் சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் கடுமையான பாதிப்புக்கு உள்ளான ஜரதாவை அழைத்துச்செல்ல அவசர உதவி ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்புகொண்டுள்ளனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் சாலை வசதி சரியாக இல்லை என்பதால் பாதிக்கப்பட்டவரை கீழே அழைத்து வரும்படி கூறியுள்ளனர்.
இதனையடுத்து உள்ளூர் இளைஞர்கள் தொட்டில் கட்டி ஜரதா நாகராஜுவைத் தூக்கிச் சென்றுள்ளனர். சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கிச் சென்று ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீங்கவரபுக்கோட்டா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
நாகராஜுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் மேல்சிகிச்சைக்காக விஜயநகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நோயாளியை கிராம மக்கள் தொட்டில் கட்டித் தூக்கிச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.