கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்த பிதார் டவுனில் உள்ள ஷாஹீன் கல்விச் சங்கத்தின் சார்பில் ஷாஹீன் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த 21-ம் தேதி நடைபெற்ற பள்ளி ஆண்டுவிழாவின் போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 4ம் வகுப்பு மாணவர்கள் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். அந்த நாடகத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக தவறான வார்த்தையைப் பயன்படுத்தி மாணவர்கள் நடித்துள்ளதாகவும், அரசின் சட்டத்தை அவமதிக்கும் விதமாக இருப்பதாகவும் கூறி இந்துத்வா அமைப்பை சேர்ந்த ஒருவர் பிதார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதேசமயம் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களின் நாடக வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதனையடுத்து வீடியோ ஆதாரங்களை வைத்து, புகார் மீது நடவடிக்கை எடுக்கும் பேரில், கடந்த 26ம் தேதி சம்பந்தப்பட்ட ஷாஹீன் பள்ளியின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 504, 5050(2), 124(ஏ), 153(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக பள்ளியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது கர்நாடக போலிஸார் பள்ளி மாணவர்களிடம் விசாரணை செய்யும் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பள்ளியின் இயக்குநர் யூசுப் அகமது கூறியதாவது, “குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் பேசியதாக கூறி, பள்ளி நேரத்தில் கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடத்துகிறார்கள். விசாரணை என்ற பெயரில் மாணவர்களை தொந்தரவு செய்கின்றனர். எங்களை தேச விரோதிகள் போன்று நடத்துகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.