டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் விலைவாசி உயர்வு, வரி வருமான சரிவு, செலவின குறைப்பு குறித்து பிரதமர் பேசுவாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில்,
1) கடந்த 2019 ஜனவரி மாதம் 2% ஆக இருந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் டிசம்பரில் 7.35% சதவீதமாக அதிகரித்துவிட்டது.
2) 2019-20ம் நிதியாண்டில் பட்ஜெட் மதிப்பீட்டை விட வரி வருவாய் ரூ.2.5 லட்சம் கோடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3) எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி, சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களுக்கான நிதி பெருமளவு குறைக்கப்படுகிறது.
இவற்றைக் குறிப்பிட்டு, நாட்டின் பொருளாதாரத்தின் உண்மையான நிலவரங்களையே மக்கள் அறிய விரும்புகிறார்கள்; அவதூறு பேச்சையல்ல எனக் தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.
மேலும் கடந்த 6 ஆண்டுகளாகியும் நல்ல நாள் வரவில்லையே ஏன் என மக்கள் கேள்வி எழுப்ப விரும்புகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மோடி ஆட்சியில் ஒவ்வொரு நாளும் கடக்கும்போது, பா.ஜ.கவின் சொல்லாட்சி 1930லில் நடந்த ஜெர்மனி நிகழ்வைத்தான் நினைவூட்டுகிறது. பா.ஜ.க அமைச்சர் அனுராக் தாக்கூர், எம்.பி. பர்வேஷ் வர்மா, திலீப் கோஷ், கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி ஆகியோர் பயன்படுத்தும் மொழி திகைப்பை ஏற்படுத்துகிறது.
பா.ஜ.க தலைவர்களின் இந்த நாகரீகமற்ற அரசியல் சொற்பொழிவு டெல்லி தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டதையே காட்டுகிறது. பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஏன் இந்த தலைவர்களுக்கு அறிவுரை கூறவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ப.சிதம்பரம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பா.ஜ.கவினர் திணறிவருகின்றனர்.