“அடுத்த ஒரு மாதத்தில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட ஒரு மசூதியையும் நாங்கள் விடமாட்டோம்” என பா.ஜ.க எம்.பி பர்வேஷ் வர்மா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து, பிப்ரவரி 8ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ம் தேதி நடைபெறுகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில் பா.ஜ.க எம்.பி பர்வேஷ் வர்மா டெல்லி தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிப் பேசுகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பர்வேஷ் வர்மா, “டெல்லியில் நடைபெறுவது சாதாரண சட்டப்பேரவைத் தேர்தல் அல்ல. இந்த நாட்டின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்தை உறுதிப்படுத்தும் தேர்தல்.
டெல்லியில் ஷாகின்பாக் பகுதியில் போராட்டம் நடத்துபவர்கள் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள். அவர்களால் உங்கள் உடமைக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்படும். அவர்கள் உங்கள் சகோதரிகளைக் கவர்ந்து, வன்புணர்வு செய்துவிடுவார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகின்பாக் பகுதியில் போராட்டம் நடத்துபவர்களை ஒரு மணிநேரத்தில் கலைத்து விடுவோம். அடுத்த ஒரு மாதத்தில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட ஒரு மசூதியையும் நாங்கள் விடமாட்டோம்.” எனப் பேசியுள்ளார்.
பா.ஜ.க எம்.பி-யின் மதவெறியைத் தூண்டும் விதமான இந்தப் பேச்சு டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.