பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடியேறும் இஸ்லாமியர் நீங்கலாக மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது மத்திய பா.ஜ.க. அரசு.
இந்த சட்டத்திருத்தம் முற்றிலும் ஒருதலைபட்சமானது. இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என தெரிவித்து இந்தியா முழுவதும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தில், இந்தியாவில் மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 6 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், ஐக்கிய ஐரோப்பிய இடது சாரிகள் மற்றும் நோர்டிக் கிரீன் இடது சாரிகள் அரசியல் குழு சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த வரைவு தீர்மானத்தில் இந்தியாவின் குடியுரிமை சட்டம் ஒரு ஆபத்தான மாற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
”சட்டரீதியாக சிறுபான்மையினரின் குடியுரிமையை பறிப்பதற்காகவே இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அமல்படுத்தப்பட்டால் உலகில் நாடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மிகப்பெரிய மனித துயரத்தை ஏற்படுத்தும்” என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்தல், முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு மாறாக எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அரசியல் தலைவர்களை இந்திய அரசு அச்சுற்றுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக சுமார் 5 பக்கங்கள் கொண்ட தீர்மானத்தை ஐரோப்பிய யூனியனில் உள்ள 150க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த தீர்மானம் வரும் புதன் கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வருகிறது. வியாழக்கிழமை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், மத்திய அரசு, நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர்களுக்கு முறைப்படி அதன் நகல் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், குடியுரிமை சட்டத் திருத்தம் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், இது குறித்த எந்த விவாதமும், தீர்மானமும் நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளது.