71வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
இதற்கிடையில், டெல்லியில் பா.ஜ.க. அரசு மேற்கொண்ட குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டங்களிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமர் மோடிக்கு பரிசு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், “இந்திய அரசியலமைப்பு விரைவில் உங்களை வந்து சேரும். நாட்டு மக்களை பிரிப்பதில் இருந்து உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவுசெய்து இதனை படியுங்கள்” எனக் குறிப்பிட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்த இந்திய அரசியமைப்பு குறித்த புத்தகத்தின் பிரதியை இணைத்துள்ளனர்.
மேலும், அந்த பிரதியில், இந்திய அரசியலமைப்பு புத்தகம் நேரடியாக டெல்லி மத்திய தலைமைச் செயலகம் உள்ள E Block பகுதிக்கும் சென்றடையும் படி பெறுநரின் முகவரியான பிரதமர் அலுவலக விலாசம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பீம் ஆர்மியின் தலைவர் சந்திர சேகர் குடியுரிமை, தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் போதெல்லாம், அரசியலமைப்பு சட்டத்தை படித்து காண்பித்து பா.ஜ.கவுக்கு கண்டனம் தெரிவித்து வருவார்.
அந்த வகையில், காங்கிரஸும் தற்போது பிரதமர் மோடிக்கு இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை பரிசாக கொடுத்திருப்பது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.