இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் சேவை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் நடுத்தர மக்களே பெரும்பாலும் ஆன்லைன் ஃபுட் டெலிவரி செயலிகளை பயன்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதில், இந்தியாவைச் சேர்ந்த ஸ்விக்கி, ஸொமேட்டோவின் பயன்பாடு அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கால் டாக்ஸி நிறுவனமான ஊபர் மற்ற நாடுகளைப் போன்று இந்தியாவிலும் உணவு டெலிவரி சேவையை ‘ஊபர் ஈட்ஸ்’ என்ற பெயரில் நடத்தி வருகிறது.
ஆஃபர்களை அள்ளிக்கொடுத்து வந்தாலும் ஸ்விக்கி, ஸொமேட்டோவிற்கு இணையாக போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ஊபர் ஈட்ஸ் விற்பனைக்கு வருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. ஆகையால், ஸ்விக்கியும், ஸொமேட்டோவும் ஊபர் ஈட்ஸை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்து வந்தன.
இதற்கிடையில், உலகின் முன்னணி ஆன்லைன் நிறுவனமாக உள்ள அமேசான் உணவு டெலிவரி துறையில் இறங்கத் திட்டமிட்டது. ஆகையால், ஊபர் ஈட்ஸை அமேசான் வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ, ஊபர் ஈட்ஸ் இந்தியாவை ரூபாய் 2,485 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும், 9.9 சதவிகித பங்கை மட்டும் ஊபர் ஈட்ஸ் இந்தியா வைத்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் ஸொமேட்டோவின் கட்டுப்பாட்டுக்குள் ஊபர் ஈட்ஸ் வந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 கோடிக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ள ஸொமேட்டோ, ஊபர் ஈட்ஸை வாங்கியதில் இருந்து மேலும் 10 மில்லியன் பயனாளர்களைப் பெரும் எனக் கூறப்படுகிறது.