அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் அதன் வருவாய் பகிர்வுத் தொகையை ஜனவரி 23ந் தேதிக்குள் செலுத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வோடஃபோன் ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் மனு தாக்கல் செய்திருந்தன.
இந்த மனு மீதான தீர்ப்பு நேற்று வெளியானது. அதன்படி, வோடஃபோன் ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதனால் அரசுக்கு வரும் 23ம் தேதி பகிர்வுத் தொகையை கட்டவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.53,039 கோடி அரசுக்கு செலுத்தவேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும், இந்நிறுவனத்துக்கு ரூ.1.15 லட்சம் கோடி அளவில் கடனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 நவம்பர் மாதத்தில் மட்டும் வோடஃபோன் ஐடியா நெட்வொர்க் 3.64 கோடி வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறது. அதேநேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ 56 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது. ஏர்டெல் 16.59 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் சரிவைச் சந்தித்தாலும், துறையில் தம்மைத் தக்கவைக்க மேலும் முதலீடுகளைச் செய்து ஜியோவுக்கு இணையாக தன் நெட்வொர்க் வசதிகளை வழங்க போராடி வருகிறது.
ஆனால் வோடஃபோன் ஐடியா நிறுவனம் அப்படி எந்த முதலீடுகளையும் செய்து தன் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இதனால், இந்திய பங்குச் சந்தையில் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்டு வருகின்றன.
வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 25.83% அளவில் சரிந்தது. இப்படியே போனால் விரைவில் வோடபோன் மேலும் கடனிலும், நஷ்டத்தில்லும் தத்தளிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஜியோ நிறுவனம் போட்டி நிறுவனங்களை அழித்து வளர்ந்து வருவதாகக் குற்றம்சாட்டப்படும் நிலையில், முன்னணியில் இருக்கும் சேவை வழங்கும் நிறுவனமான வோடஃபோன் ஐடியாவும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவது, ஜியோ வல்லாதிக்கத்தை நிலைநிறுத்திவிடும் என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.