உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தனது மகள் உயிரிழந்த நிலையில் குற்றவாளிகள் மீது புகாரளித்த தாயை வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு கான்பூரில் 13 வயது சிறுமி ஒருவர் 6 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினார். இதனையடுத்து அபித், மிந்து, மெஹ்பூப், சாந்த் பாபு, ஜமீல் மற்றும் ஃபிரோஸ் ஆகிய 6 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி உயிரிழந்த சிறுமியின் தாயார் புகாரளித்தார்.
அதன்படி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 6 பேரையும் போலிஸார் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களுக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
இதனையடுத்து ஜாமினில் வெளியே வந்த அந்த கும்பல், கடந்த வியாழன் அன்று தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட கிரிமினல் புகாரை திரும்ப பெறச்சொல்லி சிறுமியின் தாயாரை மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் சிறுமியையும், அவரது தாயாரையும் சரமாரியாக தாக்கி கொலைவெறிச் செயலில் ஈடுபட்டனர்.
இதனால் படுகாயமடைந்தவர்கள் கான்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமியின் தாயார் உயிரிழந்தார்.
இதற்கிடையே, ஜாமினில் வெளியே வந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 5 பேரை கைது செய்துள்ளதாகவும், ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளதாகவும் போலிஸ் தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட மூவரை தேடி வருவதாகவும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.